மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்பில், நல்லகண்ணு தலைமையில், “ காவிரிக்கான தமிழகத்தின் குரல்” என்கிற தலைப்பில் ஆலோசனைக்கூட்டம் மே மாதம் 19 ம் தேதி காலை 10.00 மணி அளவில் சென்னை மெட்ரோ மேனர் ஓட்டல்,97, சிடன்ஹேம்ஸ் சாலை, நேரு அரங்கம், நுழைவாயில் எண் 4 ,எதிர்புறம்,பெரியமேடு சென்னை- 600003 என்கின்ற முகவரியில் நடைபெறுகிறது .
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க திருநாவுக்கரசர், விஜயகாந்த், தமிழிசை சவுந்தரராஜன், வேல்முருகன், பாலகிருஷ்ணன், டிடிவி.தினகரன், ரஜினிகாந்த், நாசர், விஷால் உள்ளிட்டோருக்கு மக்கள் மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். மேலும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து கமல் அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்,
‘’அனைத்துக்கட்சி தலைவர்களும் சேர்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழல். ஆகவே, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். ஆளுங்கட்சியை அழைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகின்றேன்’’ என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
‘’கமல் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து 17ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.