நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என பல தரப்பு மக்களும் பல்வேறு கட்டமாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதனிடையே, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஜெம் லெபாரட்டரி நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது. எனினும் ஒஎன்ஜிசிக்கு தரப்பட்ட குத்தகையை தமிழக அரசு ஜெம் நிறுவனத்துக்கு மாற்றி தராததால் திட்டம் தாமதாமகி வந்தது. மேலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிரான வழக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஜெம் லெபாரட்டரி நிறுவனம் 10 கடிதங்கள், மத்திய அரசு 3 கடிதங்கள் அனுப்பியும் தமிழக அரசு குத்தகையை மாற்றி தர அனுமதிக்கவில்லை. இதைதொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க தாமதமாவதால் இழப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து ஜெம் லெபாரட்டரி நிறுவனம் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருப்பதால் நெடுவாசலுக்கு பதிலாக வேறு இடம் வழங்கக்கோரி மத்திய எரிவாயு, பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு ஜெம் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.