சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னையில் 15 வயது சிறுமி 400-க்கும் மேற்பட்டவர்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் நடந்து கொண்டே உள்ளது. குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 250% குற்றங்கள் அதிகமானது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பாதுகாப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் நமது நாடு உள்ளது.
கரோனா காலகட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற 15 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி பாஜகவை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி காவல் ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பலரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூகத்தில் மதிக்கத்தக்க பொறுப்பில் உள்ளவர்கள் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இவர்களுக்கு பணமும் அதிகாரமும் நம்மிடம் உள்ளது என்ற தலை கணத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே இதுபோன்ற தவறுகளை செய்ய வைத்துள்ளது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் தண்டனைகள் சரியான நேரத்தில் கடுமையான தண்டனைகளாக அளிக்கப்படாததுதான்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு எப்படி வளர்ச்சிப் பாதையில் செல்லும்? இதுபோன்ற பாலியல் கொடுமைகள் அதிகமாகிக் கொண்டே சென்றால் பெண்களின் முன்னேற்றம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும்.
பெண்களையும் பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய அமைச்சகங்கள் என்ன வேலை செய்கிறார்கள் குற்றங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது மட்டும்தான் அவர்களது வேலையா?
குற்றங்களை குறைப்பதற்கான வழிகளையும், வழிமுறைகளையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். வழக்குகளை துரிதப்படுத்தி தண்டனைகள் சரியாக கிடைக்க பட்டதா என்று ஆராய வேண்டியது அமைச்சகத்தின் முக்கிய வேலை அல்லவா?
இவ்வளவு அலட்சியமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றால் நாளை பெண் சமூகம் மிகவும் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய சமூகமாக மாறக்கூடிய அபாயமான சூழ்நிலையை எட்டிவிடும்.
இந்த 15 வயது சிறுமி பாலியல் வழக்கில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருடைய பெயரும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் அரசு பணியில் உள்ளவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்திவிட வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும் என கூறியுள்ளார்.