ரியல் எஸ்டேட் மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவக்குமார், செட்டில்மென்ட் கமிஷன் முன்பு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து போக்குக்காட்டி வருவதால், கமிஷன் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். சிவக்குமாரின் ஜாமினை ரத்து செய்யவும் உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். நிலத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு மனை அல்லது ஓராண்டில் முதலீட்டு தொகையை இரட்டிப்பாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார். இதை நம்பிய பலர், இந்நிறுவனத்தில் போட்டிப்போட்டு முதலீடு செய்தனர்.
கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் பல நூறு கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்து இருந்தனர். கோடிகளில் புரண்ட சிவக்குமார், சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் இன்னொரு ரியல் எஸ்டேட் நிறுவனமும், வின்ஸ்டார் பெயரில் உள்ளூர் டிவி சேனலையும் தொடங்கினார். அத்தோடு அவர் நில்லாமல், ஜவுளிக்கடை, பட்டாசு, இனிப்பகம், பியூட்டி பார்லர், ஜெராக்ஸ் கடைகள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை என பல்வேறு தொழில்களையும் தொடங்கி தன்னை எப்போதும் பரபரப்பான மனிதர் போல காட்டிக்கொண்டார். தவிர, பானம் என்ற பெயரில் நெல்லிச்சாறு விற்பனையிலும் இறங்கினார்.
தான் தொடங்கிய அத்தனை தொழில்களின் பெயரிலும் முதலீடுகள் குவிய குவிய, அவர் உறுதி கூறியபடி பணத்தை கொடுப்பதில் சிக்கல் ஏற்படவே, திடீரென்று ஒருநாள் தலைமறைவானார். இதற்கிடையே சிவக்குமார் மீது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார், நெல்லிச்சாறு பானத்தில் முறைகேடு போன்ற புகார்களின் பேரில் வழக்கு, கைது என செய்திகளிலும் அடிபட்டார்.
முதலீட்டாளர்கள் அவருக்கு எதிராக திரண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததோடு, ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இது ஒருபுறம் இருக்க, வின்ஸ்டார் நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, பணத்தை திரும்ப கிடைக்காத விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காள் தங்கைகள் மூன்று பேர் தற்கொலைக்கு முயன்றனர். அதில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து, 'அடுத்தடுத்து பெண்கள் பலி; மோசடி மன்னன் மீது குவியும் புகார்கள்' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு நக்கீரன் இதழும், நக்கீரன் இணையமும் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதன்பிறகே வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பலர் அவர் மீது புகார் கொடுக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டினர்.
இதெல்லாம் மோசடி பேர்வழி சிவக்குமார் பற்றி நாம் ஏற்கனவே சொல்லியிருந்த சங்கதிகள்.
சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் 1500 முதலீட்டாளர்கள் அவர் மீது 55 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்த நிலையில், சிவக்குமார் தரப்போ செட்டில்மென்ட் கமிஷன் மூலம் இப்பிரச்னையை தீர்த்துக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதையடுத்து, கோவையைச் செய்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தங்கராசு தலைமையில், பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி, சேலம் ஆர்டிஓ ஆகியோர் அடங்கிய செட்டில்மென்ட் கமிஷன் அமைத்து, கடந்த 18.12.2018ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வின்ஸ்டார் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், சேலம் பிருந்தாவன் சாலை ரமணி வீதியில் உள்ள விஜய் ஆம்பியன் குடியிருப்பில் செயல்பட்டு வரும் செட்டில்மென்ட் கமிஷன் முன்பு ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 22.7.2019ம் தேதி நிலவரப்படி 1800 முதலீட்டாளர்கள் 74 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சிவக்குமார் மீது புகார் அளித்து இருந்தனர்.
இதற்கிடையே, கடந்த பத்து நாள்களுக்கு முன்பு மூடப்பட்ட வின்ஸ்டார் அலுவலகத்தின் பூட்டை உடைத்து சிவக்குமாரின் ஆள்கள், உள்ளே இருந்த ஜெனரேட்டர்கள் மற்றும் அறைகலன் பொருள்களை அள்ளிச்சென்றுள்ளனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் தரப்பில் காவல்துறைக்கு வாய்மொழியாக புகார் அளித்தும், ஒரு ரெஸ்பான்ஸூம் இல்லை என்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல், செட்டில்மென்ட் கமிஷன் தரப்பில் இருந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பலமுறை சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பியும் இதுவரை நேரில் ஆஜராகாமல் போக்குக்காட்டி வருகிறார். இதனால் கமிஷன் தலைவர் தங்கராசு, அவர் மீது ஏகத்துக்கும் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்கின்றனர். செட்டில்மென்ட் கமிஷன் தலைவர், அவருடைய உதவியாளர்கள், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட அலுவலக பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம், போக்குவரத்து செலவு, அலுவலக வாடகை ஆகியவற்றுக்கான செலவினங்களை சிவக்குமாரே ஏற்க வேண்டும் என்றுதான் உயர்நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கமிஷன் தலைவர் உள்பட ஒருவருக்கும் ஊதியம் வழங்கப்படாமலும் இழுத்தடித்து வந்துள்ளது சிவக்குமார் தரப்பு. இதையடுத்து சிவக்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளது செட்டில்மென்ட் கமிஷன்.
வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து போராடி வரும், தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் சந்திரசேகரிடம் பேசினோம்.
''வின்ஸ்டார் சிவக்குமார், அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால், ஜெயலலிதா உருவம் பொறித்த பெரிய மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டு தன்னை எப்போதும் அதிமுக ஆதரவாளராக காட்டிக்கொள்வார். சங்ககிரியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஒருவர் மற்றும் முதல்வருக்கு நெருக்கமான, கபடி சங்க பொறுப்பாளராக உள்ள 'சாமியான' ஒருவரின் பாதுகாப்பில் சிவக்குமார் இருப்பதாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால்த £ன், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அவரை காவல்துறை இதுவரை கைது செய்யாமல் இருக்கிறது.
சேலம் மட்டுமின்றி நாமக்கல், தாராபுரம், பழனி, ஈரோடு, கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களிலும் வீட்டுமனைகளை வாங்கி போட்டிருந்தார். சேலத்தில் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டுமனை புராஜக்டுகளை செய்து வந்தார். ஆனால், செட்டில்மென்ட் கமிஷனிடம் இந்த விவரங்களை சமர்ப்பிக்காமல் பொருளாதார குற்றப்பிரிவும் மெத்தனமாக இருக்கிறது. சிவக்குமார் சொந்தமாக ஃபார்ச்சுனர் மற்றும் இன்னோவா கார்களை பயன்படுத்தி வந்தார். வீட்டுமனைகளை பார்வையிட முதலீட்டாளர்களை அழைத்துச் செல்வதற்கு வசதியாக வின்ஸ்டார் பெயரில் 72 கார்களை வாங்கி இருந்தார். இப்போது அந்த கார்கள் எல்லாம் எங்கே போயின என்பதும் மர்மமாக இருக்கிறது.
எங்களைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணம் முழுவதும் திரும்பக் கிடைக்க வேண்டும். அதற்கு வசதியாக அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்தால்தான் அவர் கமிஷன் முன்பு ஆஜராவார். இருவரின் மரணத்துக்கு காரணமான சிவக்குமாருக்கு சட்டப்படியான தண்டனை கிடைக்க வேண்டும்,'' என்றார் சந்திரசேகர்.
செட்டில்மென்ட் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராசு ஒன்றும் சாதாரணமானவரும் அல்ல. இதற்குமுன் இதேபோன்ற பல நிதிநிறுவன மோசடி புகார்களில் கமிஷன் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ள அனுபவம் மிக்கவர். திருப்பூரில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த பாசி நிறுவனம் மீதான புகார்களின்போதும் செட்டில்மென்ட் கமிஷன் தலைவராக இருந்துள்ளார்.
நாம் வின்ஸ்டார் நிறுவனம் மீதான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவரான ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தங்கராசுவிடம் நேரில் பேசினோம்.
''வின்ஸ்டார் நிறுவனம் மீதான மோசடி புகார்களை விசாரிக்க இந்த கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. ஓராண்டு காலத்திற்குள் விசாரணையை முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் முடியாவிட்டால், அவகாசம் நீட்டிப்பு கோரப்படும். வின்ஸ்டார் சிவக்குமார் விசாரணைக்கு கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் அவர் இதுவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதுபற்றி உயர்நீதிமன்றத்திற்கும் கடிதம் எழுதியிருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புகார் அளிக்கலாம். சிவக்குமார் எங்கெங்கு நிலங்கள், வீட்டுமனைகளை வாங்கி போட்டுள்ளாரோ அவற்றில் சிலவற்றை நானே நேரில் விசாரித்து தெரிந்து கொண்டேன். அவர் டிவி சேனல், யுடியூப் சேனல்களில் மூலம் பேசிய முதலீட்டு திட்டங்கள் குறித்த வீடியோ பதிவுகளையும் சேகரித்து உள்ளோம். 4000க்கும் மேற்பட்ட புகார்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். 2019 ஜூலை மாதம் வரை 1800 பேர், 74 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். வின்ஸ்டார் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை சந்தை மதிப்புக்கு விற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் முதலீட்டு தொகைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படும்,'' என்றார் ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராசு.
ஐந்தாயிரம் ரூபாய் கடன் பாக்கிக்காக விவசாயிகளை குண்டர்களை ஏவி அடித்து உதைப்பதும், பல கோடி ரூபாய் சுருட்டிய மோசடி பேர்வழிகள் ஆளுங்கட்சியினரின் கரிசனத்துடன் ராஜபோகமாக பவனி வருவதுமான ஆகப்பெரிய முரண்கள் இந்த நாட்டில்தான் சாத்தியமாகின்றன.