தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று (09-11-23) நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “பிரதமர் மோடி வறுமையை ஒழிக்க காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அறிவித்த திட்டம் என்ன? பா.ஜ.க தலைவர்கள் பழங்குடியினரின் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோவைத்தான் நான் பார்க்கிறேன். இந்தியாவில் ஒரே சாதி தான் இருக்கிறது என்று மோடி சொல்கிறார். ஆனால், அதே வேளையில், ஒவ்வொரு மேடையிலும் நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்றும் சொல்கிறார். இதன் மூலம் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளிக்கிறார் என்பது தெரிகிறது.
சாதிவாரி கணக்கெடுப்புதான் வேலைவாய்ப்பு இன்மையை சரி செய்ய சிறந்த தீர்வாக அமையும். பா.ஜ.க வெறுப்புணர்வை வளர்க்கிறது. இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ.க கடைப்பிடிக்கிறது. சாதிகளுக்கு இடையே பிரிவினையை தூண்டுகிறது. பிரதமர் மோடி அனைத்தையும் தனியார் மயமாக்குவதை விரும்புகிறார். விலைவாசியை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு ரூ.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார்” என்று கூறினார்.