கரானா நோய்ப் பரவத்லை தடுக்கும் வகையில் நான்காவது கட்டமாக மே 31 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனிடையே ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் அரசு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சில நாட்களாக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட எல்லையோர பகுதிகளிலுள் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பது தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை கேபினட் அறையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள், தலைமைச்செயலாளர், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் மதுக்கடைகள் திறப்பதன் சாதக பாதக அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்தது.
அதன்படி நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் எனவும், தமிழக பகுதியைச் சேர்ந்தவர்கள் மது வாங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மதுக்கடைகளில் சமூக இடைவெளிக் கடைப்பிடிக்கவும், முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு அரிசி பைக்குள் வைத்து டாஸ்மாக் மதுபாட்டில்களைக் கடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர். நூதன முறையில் மதுபாட்டில்களைக் கடத்திய அவர்களைத் திருக்கனுர் போலீசார் கைது செய்தனர்.