Skip to main content

கரோனாவால் மறைந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் மவுன அஞ்சலி...

Published on 18/06/2020 | Edited on 18/06/2020
​    ​police chennai

 

சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாலமுரளி (வயது 47). கரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ரூ.2.25 லட்சம் செலவில் மருந்துகளை வரவழைத்து இவருக்கு சிகிச்சை அளிக்க உதவினார் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கரோனா தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் பாலமுரளியின் உடல்நிலை நேற்று மதியம் மிகவும் கவலைக்கிடமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். பாலமுரளி மரண செய்தி கேட்டு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட சென்னை காவல்துறையே சோகத்தில் மூழ்கியது.

 

police chennai


பாலமுரளி திருவுருவப்படத்திற்கு இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர் தூவி மரியாதை செய்தனர். மறைந்த பாலமுரளிக்கு மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் போலீசார் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது. அதன்படி போலீசார் ஆங்காங்கே பணிபுரிந்த இடத்திலிருந்தே மறைந்த சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு மாலை 5 மணிக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். 

 

balamurali

 

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுரளி, கடந்த 2000-ம் ஆண்டில் தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்ந்தார். சென்னையில் கே.கே.நகர், திருவல்லிக்கேணி மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ள பாலமுரளி, சென்னை வடபழனி போலீஸ் குடியிருப்பில் மனைவி கவிதா, பிளஸ்-1 படிக்கும் மகள் ஹர்சவர்தினி, 8-வது வகுப்பு படிக்கும் மகன் நிஷாந்த் ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
 

பாலமுரளியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

படங்கள்: அசோக்குமார், ஸ்டாலின், குமரேஷ்

 

 

சார்ந்த செய்திகள்