அதிமுகவில் இருந்து 3 பேரை நீக்கியதுடன், அவர்களுடன் கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தல் செயல்பட்ட காரணத்தினாலும்,
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் பண்ணை எம்.சின்னராஜா, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணைத் தலைவர் அரசங்குடி A.N.சாமிநாதன் (திருவெறும்பூர் கிழக்கு ஒன்றியம்), மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் A.குத்புதின் ஆகியோர் இன்று (02.02.2021) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, ‘ஆண்டிப்பட்டியில் சசிகலாவை வரவேற்கும் விதமாக சின்ன ராஜா போஸ்டர்களை ஒட்டி உள்ளார். அதனால்தான் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்’ என்கின்றனர். சாமிநாதன் என்பவர் இளவரசியின் தம்பியான ராஜராஜனின் சின்ன மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.A.குத்புதினும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.