
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து திமுக நடத்திய ஆய்வு அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச்செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.
அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, கே.என்.நேரு, செங்குட்டுவன் மற்றும் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழு, ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையாக தாக்கல் செய்தது.
திமுக குழு தயார் செய்த அந்த அறிக்கையை முதல்வரிடம் இன்று அளித்த மு.க.ஸ்டாலின் அதனை அமல்படுத்த பரிந்துரைத்தார். திமுக தயார் செய்த இந்த ஆய்வறிக்கையில், போக்குவரத்து கழக இழப்பீடுகளை அரசே ஏற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
போக்குவரத்துக் கழக சீரமைப்பு தொடர்பாக 27 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கைப்படி செயல்பட்டால் மக்கள் தலையில் பேருந்து கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.
போக்குவரத்துகழகங்களை பொதுமக்களின் சேவையாக கருதி அதன் மூலமாக ஏற்படக்கூடிய நஷ்டம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டீசல் மீதான கலால் மட்டும், மதிப்புகூட்டு வரியை ரத்து செய்ய யோசனை கூறியுள்ளோம். இந்த இரண்டு வரியையும் ரத்து செய்துவிட்டு ஒரே வரியான ஜி.எஸ்.டியை அமல்படுத்த கோரியுள்ளோம். போக்குவரத்துத் துறையில் கமிஷன் வாங்காமல் இருந்தாலே நஷ்டம் ஏற்படாது.

இது போன்ற தி.மு.க ஆய்வறிக்கையில் கூறியுள்ள 27 கோரிக்கைகளை அமல்படுத்தினால் பஸ் கட்டண உயர்வு தேவையில்லை. தி.மு.க தரப்பில் ஆய்வறிக்கையை வழங்கிய பிறகு முதலமைச்சர் தரப்பில் இருந்து எந்த உறுதியும் வழங்கவில்லை. இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை இல்லையென்றால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும்.
சட்டப்பேரவையில் எந்த அடிப்படையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது . ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநரை அழைத்தும், படத்திறப்பு விழாவில் அவர்கள் பங்கேற்காதது ஏன்? ஜனநாயகத்தை காக்கும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைத்ததை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.