மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் அறிவித்தார்.
'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’திட்டம் இன்று (31-01-24) அமலுக்கு வர உள்ளது. இன்று தொடங்கும் இந்த திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அங்கு சென்று 24 மணி நேரம் தங்கி மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண்பர்.
மேலும், இந்த திட்டத்தின்படி, ஆட்சியர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை அந்த கிராமத்தில் தங்கி இருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.