இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 6ஆம் தேதி நடந்துமுடிந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. நீட் தேர்வுக்காக தமிழ் மொழியில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில், 49 கேள்விகளில் மொழிபெயர்ப்புப் பிழைகள் இருப்பதாக என்.ஜி.ஓ. நிறுவனம் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது. ’டெக் ஃபார் ஆல்’ என்ற இந்த என்.ஜி.ஓ. நிறுவனம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் நீட் தமிழ் வினாத்தாள்களில் இருக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டியது.
இந்த நிறுவனத்தை நடத்திவரும் ராம்பிரகாஷ் அப்போதே என்.சி.இ.ஆர்.டி. குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதுமட்டுமின்றி, சி.பி.எஸ்.இ.யின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்தப் பிழைகளுக்கு, கிரேஸ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
நேற்று நாடு முழுவதும் நீட் முடிவுகள் வெளியாகின. தமிழகத்தைச் சேர்ந்த கணிசமான மாணவர்கள் தங்களது மருத்துவர் கனவை இழக்கும்வகையில் இருந்தது அந்த முடிவு. இந்நிலையில், நீட் தேர்வில் மொழிபெயர்ப்புப் பிழைகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ‘டெக் ஃபார் ஆல்’ நிறுவன தலைவர் ராம்பிரகாஷ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மே 4ஆம் தேதி நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான பட்டியலை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. ஆனால், நேற்று தேர்வு முடிவுக்கு பிறகான மாணவர்கள் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் இருந்தது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் 30ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை வித்தியாசப்பட்டது என குற்றம்சாட்டினார்.
மேலும், பிழையான கேள்விகளுக்கு கிரேஸ் மதிப்பெண் கேட்பது தொடர்பாக பேசிய அவர், ஒரு கேள்வி ரூ.ஆயிரம் வீதம் 49 கேள்விகளுக்கு ரூ.49ஆயிரம் செலுத்தி, மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்கலாம். அதேசமயம், நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் என யாரும் இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகமுடியாது. எனில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பும் கிடையாது. எந்தவகையிலும் இது நியாயமானது அல்ல என ஆதங்கமாக பேசியுள்ளார்.
செய்தியாளர் : சி.ஜீவாபாரதி