ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (04-06-24) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியும், அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றது. இதனையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது.
காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஒடிசா மாநிலத்தில், 1990 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பிஜு பட்நாயக், அம்மாநிலத்தில் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார். அதனையடுத்து பிஜு பட்நாயக், ஜனதா தளம் கட்சியில் இணைந்து, 1995ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். பிஜு பட்நாயக் மறைவுக்கு பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். பின்பு கடந்த 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வரானார்.
தொடர்ந்து ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி வந்த நவீன் பட்நாயக்கிடம் வலது கரமாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் இருந்தார். இந்த நிலையில் தான், 18வது மக்களவைத் தேர்தல் தொடங்கியது. 147 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ.க என முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்தே போட்டியிட்டது. இந்த மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் புதிய வியூகமாக நவீன் பட்நாயக்கின் உடல் நலத்தையும், தமிழரான வி.கே.பாண்டியனையும் பா.ஜ.க கையில் எடுத்தது. ஆரம்பம் முதலே, பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பா.ஜ.கவினர், ஒரு தமிழரை ஒடிசாவை ஆளவிடலாமா? என்று கேள்விகள் கேட்டும் விமர்சனம் செய்து பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து பல எதிர்ப்பு கிளம்பியது.
பா.ஜ.கவினர் செய்த தமிழர் அரசியல் ஒருவகையில் அவர்களுக்கு கைக்கொடுத்துவிட்டது என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், பிஜு ஜனதா தளம் 147 இடங்களில் 51 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்துள்ளது. பா.ஜ.க 78 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றுள்ளது. இதன் மூலம், ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ.க கால் வைத்து அரியணையில் ஏற இருக்கிறது. மேலு, தொடர்ந்து முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால அரசியல் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது. இதனிடையே, தோல்வியுற்ற நவீன் பட்நாயக் அம்மாநில ஆளுநரிடன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.