Skip to main content

‘மன்னிப்பு கேட்க வேண்டும்...’ - சோனியா காந்திக்கு எதிராக பா.ஜ.க முழக்கம்!

Published on 04/04/2025 | Edited on 04/04/2025

 

Bjp demand sonia gandhi should apology for waqf bills

நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும், 12 மணி நேர விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேறியது. அதனை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசு, நிறைவேற்றியுள்ள இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

மக்களவையில் வக்ஃப் வாரிய மசோதா நிறைவேறிய பிறகு, காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி பேசுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பை சீர்குலைக்கும் செயல். இதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்.  கல்வி, உரிமைகள், சுதந்திரங்கள், கூட்டாட்சி அமைப்பு, தேர்தல்கள் என எதுவாக இருந்தாலும், மோடி அரசு நாட்டை படுகுழியில் இழுத்துச் செல்கிறது. 2004 ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கொண்டு வந்த முயற்சிகளை, பிரதமர் மோடி தனது சொந்த முயற்சிகளாக மறுபெயரிட்டு வருகிறார்” என்று கூறி குற்றச்சாட்டை வைத்தார். 

பா.ஜ.க நாட்டை படுகுழியில் கொண்டு செல்வதாக சோனியா காந்தி கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜ.கவினர் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர், இன்று காலை தொடங்கியது. அப்போது பா.ஜ.க உறுப்பினர்கள், சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்... என்று கோஷமிட்டனர். இதனால், மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

இதற்கிடையில், வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவக்ஃப் வாரிய மசோதாவிற்கு எதிராக மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் போராடும். இந்திய அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீது மோடி அரசாங்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம், தொடர்ந்து எதிர்ப்போம்’ எனப் பதிவிட்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்