Skip to main content

பக்தர்களை ஏமாற்றிய அரசாங்கம் – பணக்காரர்களுக்கு சுலபமாக அண்ணாமலையார் தரிசனம்?.

Published on 29/04/2018 | Edited on 30/04/2018
annamaliyar girivalam

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரே மலையாக உள்ளார் என 14 கி.மீ விட்டம்வுள்ள மலையை வலம் வருகிறார்கள்.

 

பௌர்ணமி தோறும் வரும் பக்தர்கள் அளவை விட கார்த்திகை மாத பௌர்ணமியன்றும், சித்திரை மாத பௌர்ணமியன்று அதிகளவு பக்தர்கள் வருவார்கள். அதாவது சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதற்காக ஒவ்வொரு வருடமும் இந்த இரண்டு பௌர்மணயின் போது மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 2018 சித்திரை மாத பௌர்ணமி ஏப்ரல் 29ந்தேதி காலை 6.35க்கு தொடங்கி ஏப்ரல் 30ந்தேதி காலை 6.30க்கு முடிகிறது.

 

15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன. 2 ஆயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர், பக்தர்களின் நலனுக்காக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

 

குடிநீர் ஏற்பாடுகள் கிரிவலப்பாதை மற்றும் கோயில் வளாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது, வெயில் காலம் என்பதால் கிரிலப்பாதையில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சாலையில் தண்ணீர் ஊற்றப்படும், இதனால் பக்தர்கள் வெயில் சூடுயில்லாமல் நடந்து செல்லலாம், கோயிலுக்குள் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என 28ந்தேதி மாலை 5 மணிக்கு கோயில் வளாகம், தற்காலிக பேருந்து நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

அமைச்சர் குறிப்பிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுயிருந்ததா என கண்காணித்தபோது, சிறப்பு ஏற்பாடுகள் என்பது பெரும்பாலும் எதுவும் செய்யவில்லை என தெரியவந்தது. காலை 11 மணிக்கு மேல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது, இதனால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடக்க முடியாமல் தவித்தனர். கிரிவலப்பாதையில் சுமார் 5 கி.மீ வரையே மரங்கள் அடர்ந்துயிருக்கும் அந்த பகுதியில் கிரிவலம் வரும்போது மட்டும் காலுக்கு சூடு தெரியாது. மற்ற இடங்களில் வெயில் சூடு தெரியும். இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் ஓய்வு அறைகளை அமைக்கவில்லை மாவட்ட நிர்வாகம்.

அதோடு ஈசான்யம் மைதானம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், மார்க்கெட்டிங் கமிட்டி, தண்டராம்பட்டு சாலை போன்ற தற்காலிக பேருந்து நிலையங்களில் 10க்கு 10 அளவில் பேனர்களால் அமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வு நிலையம் என அமைக்கப்பட்டது. மற்ற மாதங்களில் சரி. கோடை வெயில் தமிழகத்தில் சுட்டெரிக்கும் மாவட்டத்தில் 3வது மாவட்டமாக திருவண்ணாமலையுள்ளது. அப்படிப்பட்ட மாவட்டத்தில் லட்சகணக்கான பக்தர்கள் வரும்யிடத்தில் ஒரு நூறு பேர் அமரும் அளவுக்காவுது இந்த மாதம் ஒய்வு அறை அமைத்துயிருக்கலாம் என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

 

அதேபோல் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிரிவலப்பாதை முழுவதும் சாலையில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. அதனையும் முறையாக செய்யவில்லை. கடமைக்கு என செய்தனர்.

கிரிவலப்பாதையில் உள்ள தண்ணீர் டேங்க்களில் பக்தர்கள் குடிக்க நிரப்பப்படும் தண்ணீர் 2 அல்லது 3 மணி நேரத்தில் காலியாகிவிடுகின்றன. இதனால் பக்தர்கள் குடிதண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தொடர்ச்சியாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கார்த்திகை மாத தீபத்திருவிழாவின் போதும், சித்திரை மாத பௌர்ணமியின் போது பக்தி அமைப்புகள் பக்தர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றனர், மாவட்ட நிர்வாகமாகட்டும், ஆய்வுக்கு வரும் அமைச்சர்களாகட்டும் இந்தமுறை அந்த பிரச்சனை இருக்காது என ஒவ்வொரு முறை வாக்குறுதி தருகின்றனர். அந்த வாக்குறுதிகள் காற்றோடு போய்விடுகின்றன. இந்த முறையும் அதேதான் நடந்தது.

 

திருவண்ணாமலை மாவட்ட திமுக உட்பட சமய அமைப்புகள், தொண்டு அமைப்புகள் பலயிடங்களில் பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர், மோர் வழங்கினார்கள். அதுவே பக்தர்களின் தாகத்தை தீர்த்தது. கோயில் நிர்வாகம் சார்பில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தண்ணீர், மோர் தரப்படும் என அமைச்சர் அறிவித்தார். இலவச தரிசனம் செய்ய சென்றவர்களுக்கு தண்ணீர் சுலபமாக கிடைத்தது. 50 ரூபாய் டிக்கட்டில் சென்ற பக்தர்களுக்கு தண்ணீர் வசதியே செய்யப்படவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.

 

அதோடு, கோயிலுக்குள் சிறப்பு தரிசனம் இல்லை என்றார் அமைச்சர். ஆனால் விவிஐபிகளுக்காக சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு அந்த வழியாக கோயிலுக்குள் சென்று சுலபமாக தரிசனம் செய்துவிட்டு வந்தனர். கோயிலுக்குள் உள்ள புரோக்கர்களும், சில சிவாச்சாரியர்களும் தங்கள் பங்குக்கு பணம் வாங்கிக்கொண்டு அதே வழியில் பணம் தரும் பக்தர்களை அழைத்து சென்று அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை தரிசிக்கவைத்தனர். முறையாக கோயில் நிர்வாகத்தில் வழங்கப்படும் தரிசனத்துக்கான அனுமதி டிக்கட் வாங்கிக்கொண்டும், அதை வாங்க முடியாதவர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று தரிசனம் செய்பவர்கள் பல மணி நேரம் காத்திருந்தே தரிசனம் இந்தமுறையும் செய்தனர்.

 

கிரிவலத்துக்காக வரும் வாகனங்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த ஆன்லைன் புக்கிங் வசதியை மாவட்ட எஸ்.பி பொன்னி துவக்கிவைத்தார். 29ந்தேதி இந்த சேவை துவங்கும் என்றார். 28ந்தேதி காலையே புக்கிங் முடிந்தது என்றது அந்த வெப்சைட். அதுமட்டும்மல்ல முறையாக காவல்துறை வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யாதது, சரியான சாலை வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு சாலையிலும் 5 கிலோ தூரத்துக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நின்றதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது.

 

கோடை விடுமுறை, வாரவிடுமுறை போன்றவற்றால் 28ந்தேதி மாலையே பக்தர்கள் கிரிவலம் துவங்கிவிட்டார்கள், லட்சகணக்கான பக்தர்கள் தற்போது கிரிவலம் வருகிறார்கள். பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து தருவோம் என அரசுத்துறைகள் அறிவித்தன. ஆனால் இந்தமுறையும் மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் பக்தர்களை நன்றாக ஏமாற்றியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 girivalam

 

girivalam 1

 

girivalam 2

 

girivalam 3

 

girivalam 4girivalam 5girivalam 6

 

girivalam 7girivalam 8girivalam 9girivalam 10girivalam 11girivalam 12girivalam 13girivalam 14

 

சார்ந்த செய்திகள்