காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் சார்பில், பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், “கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமுமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
பதினேழு ஆண்டு காலம் போராடிப் பெற்ற காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றம் கடந்த 16.2.2018 அன்று தீர்ப்பளித்தது. அதில் “ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்” என்ற உச்சநீதிமன்றம் பக்கம் 457-ல் தெளிவாக “இந்த ஆறு வாரக் காலக் கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது” (It is hereby made clear that no extension shall be granted for framing of the scheme on any ground)என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து இறுதி தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று இதைவிட தெளிவாக உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளிக்க முடியாது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத்துறை செயலாளரும் மீண்டும் மீண்டும் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள், “கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாது”, “காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் கூறவில்லை” “ஸ்கீம் உருவாக்க வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது” என்றெல்லாம் தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே அவமதித்தார்கள். அதை பிரதமர் கண்டிக்கவும் முன்வரவில்லை. தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. தமிழக அரசின் இந்தப் போக்கினால், தமிழகத்தை ஆட்சி செய்யும் தார்மீகத் தகுதியை அ.தி.மு.க. இழந்து விட்டது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.
“ஸ்கீம்” என்பதே “மேலாண்மை வாரியம் அமைப்பதுதான்” என்பதை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்தும், கர்நாடக தேர்தல் லாபத்திற்காக புரியாதது போல் கபடநாடகமாடிக் கொண்டிருக்கிறது. 1956-ஆம் ஆண்டின் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தில்” சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டப் பிரிவு: 6-A(2)-ன்படி, “ஸ்கீம்” என்பது “ஆணையம்” (Authority) என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே “ஆணையம்” என்பதை உள்ளடக்கிய ஸ்கீம் உருவாக்க வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மத்திய அரசுக்கு இட்டிருக்கும் கட்டளை. அதுமட்டுமின்றி காவிரி இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த “பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம்” போல் அமைக்க வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருப்பது மட்டுமின்றி, தீர்ப்பில் பக்கம் 337-ல் உள்ள பத்தி 290-ல் “ நடுவர் மன்றம் சுட்டிக்காட்டிய காவிரி மேலாண்மை வாரியம் பற்றியும் அதன் விவரங்கள், கூட்டங்கள் நடத்தும் முறை ஆகியவை” பற்றியும் உச்சநீதிமன்றமே விளக்கிக் கூறியிருக்கிறது. ஆகவே காவிரி நடுவர் மன்றத்தால் உத்தரவிடப்பட்ட “காவிரி மேலாண்மை வாரியத்தை” உச்ச நீதிமன்றம் அய்யம் திரிபற ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை மறுத்து, வேண்டுமென்றே இதுவரை தாமதம் செய்து, தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு இப்போது “விளக்கம் கேட்கிறோம்” என்ற பெயரில் “மூன்று மாத கால அவகாசம்” கோரியும், “நடுவர் மன்றம் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாறாக வேறு ஒரு ஸ்கீமை மத்திய அரசு உருவாக்கலாமா” என்றும், தமிழகத்தின் காவிரி உரிமையை அடியோடு நீர்த்துப் போக வைக்கும் விளக்கத்தையும் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது. இது விளக்கமல்ல, விதண்டா வாதம். குறிப்பாக “கர்நாடாகாவில் தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த ஸ்கீமை உருவாக்கினால் கலவரம் வரும்” என்று மத்திய அரசே கற்பனை செய்துகொண்டு உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. “கர்நாடகத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம்” என்று தலைமை தேர்தல் ஆணையரே அறிவித்து விட்ட பிறகு, அதே காரணத்தை உச்ச நீதிமன்றத்திடம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கூறி முறையிடுகிறது. ஏற்கனவே மத்திய அரசு 2016ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னபோது, “நாங்கள் மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறது. இது தமிழகத்தை வஞ்சிப்பதையே மத்திய பா.ஜ.க.அரசின் நோக்கமாக இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. பா.ஜ.க.வின் சொந்த தேர்தல் லாபத்திற்காக குறுகிய அரசியல் நோக்கத்தோடு தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நசுக்குவதுடன், மத்திய அரசு தனது மேலாண்மை அதிகாரத்தையும் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்கிறது என்று இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கருதுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மதிக்காத மத்திய அரசின் போக்கை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்புக்குள்ளாக்கும் இப்படியொரு அசாதாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் - பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. “பஞ்சாப் நேஷனல் வங்கி” நிராவ் மோடி ஊழல், “நம்பிக்கையில்லாத் தீர்மானம்” போன்றவற்றிலிருந்து பா.ஜ.க. அரசை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக “பாராளுமன்ற ஆர்ப்பாட்ட”மெனும் ஓரங்க நாடகத்தை நடத்தியது அ.தி.மு.க.வின் ஐம்பது எம்.பி.க்கள் இருந்தும் மத்திய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க முடியாமல், அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்திக்க ஒரு “அப்பாயின் மெண்ட்” வாங்கக்கூடத் துப்பில்லாமல், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தீர்ப்பிற்கு எதிராகப் பேசியபோதே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அஞ்சி ஒதுங்கி, காவிரிப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் அளித்த ஒத்துழைப்பையும் பயன்படுத்திக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டு, மத்திய அரசு மூன்று மாத காலம் அவகாசம் கேட்டு மனு செய்துள்ள நிலையில், தமிழக அரசு அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருப்பது எல்லாம் அ.தி.மு.க. அரசு மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழக சரித்திரத்தில், இதுவரை காணாத துரோகம் செய்வதை உறுதி செய்கிறது.
ஆகவே அனைத்து வகையிலும் தமிழகம் காவிரி நதிநீர் உரிமையை இழந்து கைபிசைந்து நிற்கும் அவலத்திற்கு அடிப்படைக் காரணமான அ.தி.மு.க. அரசுக்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மதவெறி தலைக்கேறி கோரத் தாண்டவமாடும் மத்திய பா.ஜ.க.அரசுக்கு மண்டியிட்டு கிடப்பதுடன், தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாகத் தட்டிப் பறிக்கப்படுவதற்கு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு “இணைபிரியா கூட்டாளியாக” அ.தி.மு.க. அரசு இருந்து, அனுமதித்துக் கொண்டிருப்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகவும் கவலையுடன் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
மத்திய - மாநில அரசுகளின் கூட்டு அலட்சியத்தால் காவிரி விவகாரத்தில் மாட்சிமைமிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றவே போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும் நடத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
ஆகவே காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததையும், மேலும் மூன்று மாத கால அவகாசம் கேட்பதையும் கண்டித்தும், உடனடியாக நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரமுள்ள ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கக் கோரியும், முதல் கட்டமாக வருகின்ற 2018, ஏப்ரல் 5ஆம் தேதியன்று, மாநிலம் தழுவிய “பொது வேலை நிறுத்தம்” நடத்துவதெனவும், மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தொழிற் சங்கங்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தந்து நமது மாநில வாழ்வாதார பிரச்சினைக்கு துணை நிற்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன்;
அடுத்த கட்டமாக, காவிரி டெல்டா பகுதியிலிருந்து தொடங்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் - அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாக பங்கெடுத்து, தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி, “காவிரி உரிமை மீட்புப் பயணம்” மேற்கொள்வதென்றும்;
தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், வேண்டுமென்றே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் சார்பில், பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், “கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.