Skip to main content

இன்று தமிழகம் வரும் பிரதமர்

Published on 06/04/2025 | Edited on 06/04/2025
 Prime Minister to visit Tamil Nadu today

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை  நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமரின் வருகை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கூறியுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் இன்று (06/04/2025) 11 மணி முதல் 3 மணி வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6000க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

 Prime Minister to visit Tamil Nadu today

பிரதமர் மோடி வரவுள்ள மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சார்பில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் மட்டும் சுமார் 4000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்