
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 17வது போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (05.04.2025) மாலை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 183 ரன்களை குவித்தது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. இருப்பினும் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுள்ளது. அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி அணி சென்னையை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 34 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.