வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் (04.12.2023 மு.ப. & பி.ப. மற்றும் 06.12.2023 மு.ப.) உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, மிக்ஜம் புயல் காரணமாக திங்கட்கிழமை (04.12.2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
இதனால் நேர்முகத்தேர்வு நாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் திங்கட்கிழமை (04.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு புதன் கிழமைக்கும் (06.12.2023), புதன் கிழமை (06122023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வியாழக்கிழமை (07,12,2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே திங்கட்கிழமை (04122023) அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (06.12.2023) அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும் புதன் கிழமை (06.12.2023) அன்று தடைபெறவுள்ள தேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.