ஆண்டுதோறும் டிசம்பர்-6ல் இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பதற்றம் நிலவுகிறது. அயோத்தி விவகாரமே இதற்கு காரணம். அயோத்தி கலவரம் நடந்து இருபத்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் இப்போதும் டிசம்பர்-6களில் இதே பதற்றம் நீடிக்கிறது. அயோத்தி வழக்கிலும் இதே பதற்றம் இருந்து வரும் நிலையில், அக்டோபர் 18ந் தேதியுடன் அயோத்தி வழக்கின் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
அயோத்தியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இஸ்லாமியர்கள் வழிபட்டு வந்த பாபர்மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம், ராமர் ஜென்மபூமி என்றும், ராமர் அங்குதான் பிறந்ததாகவும் இந்துக்கள் நம்பி கொடிபிடித்து பிடித்தனர். 90களில் இது வேகமெடுத்தது. 1991ம் ஆண்டில் உத்தர பிரதேச அரசு, ராமர் கோவில் கட்ட போகிறோம், அதற்காக வசதியாக நிலம் வேண்டும் என்று இந்த மசூதியை சுற்றி இருந்த நிலங்களை கையகப்படுத்தியது. அதன்பின்னர், 6.12.1992ல் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் இந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு மிகப் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
பாபர் மசூதி இடிப்பிற்கு எதிராக 2002ல் அலகாபாத் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 30.9. 2010ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அத்தீர்ப்பில், இந்த சர்ச்சைக்கு உரிய நிலத்தை உபி சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அனைத்து தரப்பினரும் தங்களது இறுதிவாதங்களை அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். விசாரணையை விரைந்து முடிப்பதற்கு தேவைப்பட்டால், நாள்தோறும் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இறுதி வாதங்கள் அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும் பட்சத்தில், நவம்பரில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.