சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் மணிப்பூர் மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இன்று அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அண்ணாநகர் பகுதியிலிருந்து சுமார் 1200 பேர் இன்று புறப்பட்டனர்.
சூளைமேடு பகுதியிலிருந்து 230 பேரை ஒருங்கிணைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மாநகர பேருந்தில் அனுப்பி வைத்தார் மேரி. அவரிடம் பேசியபோது, "மணிப்பூரில் இருந்து சென்னை வந்து பணிபுரியும் எங்கள் மாநில மக்கள் யாரேனும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பினால், மணிப்பூர் மக்கள் ஒருங்கிணைப்புக் குழு என்கிற எங்கள் மணிப்பூர் அரசின் இணையத்தில் பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி நாங்கள் பதிவு செய்தோம். மேற்படி பதிவு செய்தவர்களின் விபரங்களைத் தமிழக அரசிடம் எங்கள் மாநில அரசு தகவல் கொடுத்ததால் அனைவரும் பாதுகாப்பாக இரு அரசுகளின் ஒத்துழைப்போடு எங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கிறோம். தமிழகம் முழுவதும் எங்கள் குழுவின் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து அனைவரையும் அனுப்ப ஏர்பாடு செய்கின்றனர். நான் சூளைமேடு பகுதியில் பொறுப்பேற்று அரசின் உதவியோடு செல்கிறோம்" என்றார்.
இதற்கிடையில் இவர்கள் செல்வதைக் கேள்விபட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் எங்களையும் அழைத்து செல்லுமாறு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களைப் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.