சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். இச்சந்திப்பின்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ’’இன்று மாலையில் கமல்ஹாசன் எனக்கு போன் செய்து கலைஞரை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நான் ஏற்பாடு செய்தேன். கலைஞருடனான சந்திப்பில் புதிய கட்சியை தொடங்குவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அவருக்கு கலைஞர் வாழ்த்துக்களை தெரிவித்தார். நானும் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
முன்பு ரஜினிகாந்த் கலைஞரை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். கலைஞரும் நானும் வாழ்த்துக்களை தெரிவித்தோம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், நிலைத்து நிற்க வேண்டியது அவரவர் செயல்களை பொறுத்தது.
காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். இக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படும். பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, வரும் 21ம் தேதி புதிய அரசியல் கட்சி துவங்கவிருக்கிற கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.’’ என்று தெரிவித்தார்.