இந்தியாவிலும் உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் அத்தத்துவம் நடைமுறையில் இருப்பதாக வைத்துக் கொண்டால், இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் அவரை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க முடியும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை:’’இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் என்ன நடந்து விடக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அது நடந்து விட்டது. போர்க்குற்றவாளிகள் மீதான போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் நடைமுறைகளை இலங்கை அரசு குழி தோண்டி புதைத்து விட்டது.
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்; அந்த விசாரணையில் பன்னாட்டு சட்ட வல்லுனர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், அதன்மீது இலங்கை நடவடிக்கை எடுக்காத நிலையில், மேலும் 2 ஆண்டுகள் காலநீட்டிப்பு வழங்கி புதிய தீர்மானம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் தற்போதைய நிலை தொடர்பாக விவாதிக்க ஐநா. மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடர் வரும் 26 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 23ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான் பேரவையின் தீர்மானத்தை செயலாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அப்பட்டமாக கைவிட்டு விட்டதாக குற்றஞ்சாற்றியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, பன்னாட்டு சட்ட விதிகளின் கீழ் குற்றவாளிகளை தண்டிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்ப டவில்லை. வடக்கு கிழக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை மக்களிடம் திருப்பி அளிப்பதிலும் முன்னேற்றம் இல்லை. இலங்கையில் நிலைமாற்ற நீதிக்கான (Transitional Justice) செயல்திட்டம் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இதற்கான காலத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. இது தொடர்பாக முன்பு கூறப்பட்ட நடவடிக்கைகள் எதிலும் முன்னேற்றம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கச் செய்வதற்கான திட்டமும் வெளியிடப்படவில்லை. உண்மை அறியும் ஆணையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் இல்லை. 2012 வெளிக்கடா சிறையில் 27 பேர் படுகொலை. 2006-ல் முத்தூரில் 17 தன்னார்வப் பணியாளர்கள் கொலை. 1996-ல் குமாரபுரத்தில் 23 தமிழர் படுகொலை, 2009-ல் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை போன்ற குற்றங்களிலும் நீதிவழங்க இலங்கை முன்வரவில்லை என குற்றஞ்சாற்றியுள்ளார்.
ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் அரக்கத்தனமாக இனப்படுகொலை செய்யப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. முதலில் போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்று கூறி விசாரணைக்கு மறுத்து வந்த இலங்கை அரசு, இப்போது போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு போர்க்குற்றவாளிகளை தண்டிக்க முன்வராதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், அதற்கான மாற்று வழிகளை ஆராய்வது தான் நியாயமானதாக இருக்கும். அதைத் தான் ஐ.நா. மனித உரிமை ஆணையரும் கூறியிருக்கிறார். உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவம் எந்தெந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளதோ, அந்நாடுகள் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் கோரியுள்ளார். இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது எந்தெந்த நாடுகளில் உள்ளார்களோ, அவர்கள் மீது அந்தந்த நாடுகளில் வழக்குத் தொடர்ந்து விசாரித்து தண்டிப்பது தான் உலகளாவிய நீதிவழங்குதலாகும். உதாரணமாக இந்தியாவில் அத்தத்துவம் நடைமுறையில் இருப்பதாக வைத்துக் கொண்டால், இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் அவரை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க முடியும். அதற்கு வசதியாக இந்தியாவிலும் உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவத்தை (universal jurisdiction) நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர் படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு வெளியில் பன்னாட்டு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது, இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நா மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்முயற்சிகளை உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ’’