நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். இருப்பினும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவரிடம் கூறினேன். என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பணம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி தடங்கம் கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்தான் சூப்பர். தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்று யாரை பார்த்து சொல்கிறார். தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற பணத்தை பா.ஜ.க உங்களுக்கு தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா. தேர்தலில் நின்றால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதாலே நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடவில்லை” எனத் தெரிவித்தார்.