மக்களவைத் தேர்தல் ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கும் நிலையில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (01-06-24) நடைபெற்று முடிவடைந்தது. இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு என்பது உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று இன்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ரிபப்ளிக் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 359 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 30 இடங்களில் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா பொருத்தவரை இந்தியா நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 371 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும், பிற கட்சிகள் 47 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் பிமார்க் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க 359 இடங்களிலும், காங்கிரஸ் 154 இடங்களிலும், பிற கட்சிகள் 30 இடங்களிலும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
39 தொகுதிகள் கொண்ட தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியா டுடே என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, திமுக தலைமையிலான கூட்டணி 33-37 இடங்களிலும், அதிமுக கூட்டணி 0-2 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 2-4 இடங்களில் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. அதே போல், சி.என்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, திமுக கூட்டணி 36-39 இடங்களிலும், அதிமுக கூட்டணி 0-2 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 1-3 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. அதே போல், நியூஸ் 18 மற்றும் சி.என்.என் ஆகிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாவது, திமுக கூட்டணி 36-39 இடங்களிலும், அதிமுக கூட்டணி 0-2 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 1-3 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பா.ஜ.க கூட்டணி 23-25 இடங்களிலும், காங்கிரஸ் 3-5 இடங்களிலும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. 20 தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தை பொறுத்தவரை டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, இடதுசாரி கூட்டணி 2-5 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 15-18 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 1-3 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தனியார் ஊடகங்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றன.
7வது மற்றும் இறுதிக் கட்டமாக இந்திய நாடாளுமன்றத்திற்கான நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.