18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.
இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் பங்கேற்க இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜன சேனா, லோக் ஜன சக்தி, அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கின்றன. அதேபோல இந்த கூட்டத்தில் தமிழகத்திலிருந்து பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்க உள்ளது.
அதேநேரம் மறுபுறம் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டமும் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கவும், வியூகம் அமைக்கவும் திட்டம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியமானது என்பதால் கடந்த இரண்டு முறை ஆட்சியிலும் அதை பாஜகவே தக்கவைத்துக் கொண்டிருந்தது. சென்ற முறை ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தார். அதற்கு முன்பும் சபாநாயகர் பாஜகவை சேர்ந்தவராகவே இருந்தார். ஆனால் இந்த முறை சபாநாயகர் பதவி எங்களுக்கு வேண்டுமென தற்போது பாஜக கூட்டணியில் முக்கிய தூண்களாக இருக்கும் சந்திரபாபுவின் தெலுங்கு தேசமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா என மாநிலங்கள் பிரிக்கப்பட்ட சமயத்தில் இருந்து ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த நிபந்தனையை தற்பொழுது மீண்டும் கையில் எடுத்துள்ளது தெலுங்கு தேசம். அதேபோல் பீகார் மாநிலம் பின்தங்கி இருக்கிறது எனவே எங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என மாநில முதல்வர் நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் இந்த கோரிக்கைகளை பாஜக சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இன்று நடைபெற இருக்கும் பாஜகவின் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.