Skip to main content

ஆட்சியில் அமரப்போவது யார்?; ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

Published on 08/10/2024 | Edited on 08/10/2024
Counting of votes in Haryana, Jammu and Kashmir begins!

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் அம்மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

அதே போன்று, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் அங்கு முதல்முறையாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில், 3 கட்டங்களாக வாக்கிப்பதிவு நடைபெற்றது. 2014ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக  மெகபூபா முப்தியின் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் புதிதாக ஆரம்பித்த ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சாம்ஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தனர். அதில், ஹரியானா சட்டமன்றத்திற்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 67.90% வாக்குகள் பதிவானது. அதே போல், ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவானது. 

சட்டமன்றத் தேர்தல் நடந்த முடிந்த பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகின. அதில், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற பா.ஜ.க ஆட்சி மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்குமா? சிறந்து அந்தஸ்த்தை ரத்து செய்து 2 யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற பல கேள்விகள் எழுந்தது. 

இந்த நிலையில், தொடர்ந்து பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வந்த ஹரியானா மாநிலத்திலும், 9 வருடங்களுக்கு பிறகு தேர்தல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீரிலும், இன்று (08-10-24)காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்படி, முதலில் தபால் வாக்குகளும் அதை தொடர்ந்து இயந்திரங்களி; பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதனையொட்டி, அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்