ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் ஆறு கட்டங்களாக 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, இறுதி கட்டமாக நாளை (01-06-24) உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் என உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின்னர், ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, ஜூன் 1ஆம் தேதி அன்று முக்கிய ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி கட்சியினருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நாளை மாலை 3 மணி போல் அவரது தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது.
டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில், திமுக எம்.பியும், பொருளாளருமான டி.ஆர்.பாலு பங்கேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இறுதிக்கட்ட தேர்தல் மற்றும் புயல் பாதிப்பு காரணமாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.