உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கைரேகை சட்டத்தை எதிர்த்து, போராடி உயிர்நீத்த 16 பேரின் நினைவிடத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தச் சென்றார். நாம் தமிழர் கட்சியினரும் அதிக அளவில் அங்கு திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய வைகோ, ’’நான் தமிழன் அல்ல; தெலுங்கன் என்று அப்பாவி இளைஞர்களை சில உசுப்பேற்றி விடுகின்றனர். இந்த பேச்சை நம்பி என்னை தெலுங்கன் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர். எனது ஜாதியை கூறி, என்னை தொடர்ந்து விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த எச்சரிக்கையை வெளியே கூடியிருக்கும் கட்சியினருக்கு தான் விடுக்கிறேன். என்னை பற்றி மீம்ஸ் போட என்னடா தைரியம் உங்களுக்கு. துண்டு துண்டாக்கிவிடுவோம். உன் தலைவனுக்கு சொல்லிவை’’ என்று எச்சரித்தார்.
வைகோவின் இந்த எச்சரிக்கையினால் நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அசம்பாவீதம் ஏதும் ஏற்பட்டு விடும் என்று போலீசார் உடனடியாக வைகோவை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதால் அவர் புறப்பட்டார். வைகோ வெளியே செல்லும் போது, நாம் தமிழர் கட்சியினர் வைகோவை தாக்க முயன்றனர். தாக்க முயன்றவர்களுடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த மதிமுக தொண்டர்களும், போலீசாரும், வைகோவை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.