Skip to main content

இபிஎஸ்க்கு எதிரான வழக்கு; உச்சநீதிமன்ற நீதிபதி முக்கிய அறிவுறுத்தல்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Case against EPS; Supreme Court Judge Key Instruction

 

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

 

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் கடந்த 2018இல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் தவறில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடுகளைக் காண முடியாது. ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்தத் தேவையில்லை, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை விசாரிக்கக் கோரிய ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

 

Case against EPS; Supreme Court Judge Key Instruction

 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் போஸ் மற்றும் பீலா எம். திரிவேதி அமர்வு முன்பு இன்று (29.11.2023) விசாரணைக்கு வந்தது.

 

அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகினார். அவர், “இந்த வழக்கு ஏற்கனவே 3 முறை அனிருதா போஸ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அதன்படி இறுதி விசாரணை தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது இந்த அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு அமர்வில் விசாரித்து வரும் வேளையில், வேறு ஒரு அமர்வுக்கு மாற்றுவது என்பது பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வழக்கை பட்டியலிடும் பதிவாளரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “இந்த வழக்கை தற்போதைய அமர்வே விசாரிக்கலாம். கடந்த முறை கூடுதல் விசாரணை இல்லாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என நீதிபதி பீலா எம். திரிவேதி அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த தங்களது கோரிக்கைகளை தலைமை நீதிபதி முன்பு வைக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் அறிவுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்