
கோடைக்காலம் நெருங்கி வருவதால் தர்பூசணி பழங்களின் விற்பனை தொடங்கி வருகிறது. கோடைக்காலம் என்றாலே பல இடங்களில் தற்காலிக தர்பூசணி கடைகள் முளைக்கும். இத்தகைய சூழலில் தான் செயற்கையாக ஊசி செலுத்திப் பழுக்க வைக்கப்படும் பழங்கள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊசி மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டி இருந்த தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் தான் தர்ப்பூசணி பழத்தில் கலப்படம் செய்யப்படுவதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த தர்ப்பூசணி பழங்களின் விலை கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் பல்வேறு பகுதிகள் விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஸ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், “பழங்களை வெட்டும்போதோ, அதனைக் கையில் தொட்டவுடனோ அடர் சிகப்பு நிறம், மிகவும் தித்திப்புடன், சர்க்கரை பாகு போன்று இருந்தால் அது இயற்கையான பழங்கள் கிடையாது. எல்லா விவசாயிகளும் தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாகக் கூறவில்லை. தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம். எனவே பொதுமக்கள் அச்சமின்றி தர்பூசனை பழங்களைச் சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது ஆகும்.