நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆந்திரா - 25 தொகுதிகளுக்கும், தெலங்கானா - 17 தொகுதிகளுக்கும், பீகார் - 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் - 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் - 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா - 11 தொகுதிகளுக்கும், ஒடிசா - 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் - 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் - 8 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீர் 1 தொகுதிக்கும் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். மே 20ஆம் தேதி அன்று ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ரேபரேலி தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர், “நான் ராகுல் காந்தியிடம் 5 கேள்விகளை கேட்க விரும்புகிறேன். மோடி ஒழித்த முத்தலாக்.. அது நல்லதா கெட்டதா? ரேபரேலி மக்களுக்கு பதில் சொல்லுங்கள் ராகுல், நீங்கள் முத்தலாக்கை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்களா? இன்று, ரேபரேலி மக்கள் முன்னிலையில் உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லீம் தனிநபர் சட்டத்திற்கு பதிலாக, பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லீம் தனிநபர் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்பீர்களா?. மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார், அது நல்லதா கெட்டதா? நீங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை ஆதரிக்கிறீர்களா இல்லையா? கும்பாபிஷேகத்திற்கு பிறகு அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நீங்கள் ஏன் செல்லவில்லை?. பதில் சொல்லுங்கள். கடைசியாக, ரேபரேலி மக்களிடம் ராகுல் காந்தி சொல்ல வேண்டும். நீங்கள் 370வது சட்டப்பிரிவை நீக்குவதை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?. இந்த ஐந்து கேள்விகளுக்கும் ராகுல் பதிலளிக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு தான், ரேபரேலி மக்களிடம் ராகுல் காந்தி வாக்கு கேட்க வேண்டும்” என்று கூறினார்.