திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை கண்டித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் வழங்கினர். அதாவது, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தரும் உத்தரவிட்டனர். இதனால் வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு விவாதங்களும், அதிருப்திகளும் எழுந்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி இதுதொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
அதில், ’நீதிமன்றத்தில் இருவேறு தீர்ப்புகள். அப்போ 18 ஐ பிரித்து ஆளுக்கு ஒன்பது எம்.எல்.ஏக்களா’ என்று திருநங்கைகள் இருவரின் படத்தை அதில் பயன்படுத்தியிருந்தார்.
இதற்கு தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள திருநங்கைகளை இவ்வாறு இழிவுபடுத்துவது ஏற்புடையது அல்ல என சமூகவலைதளங்களில் கஸ்தூரிக்கு எதிராக கருத்துகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், திருநங்கைகள் குறித்து இழிவான கருத்து தெரிவித்ததாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை கஸ்துரியின் இல்லத்தின் முன்பு திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர்.