சேலம் அருகே, அப்பாவி விவசாயிகள் இருவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பிய விவகாரத்தில் அண்ணாமலை, மலை மலையாக பொய்களை கொட்டியிருப்பது அம்பலமாகி இருக்கிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஆர்.என்.பாளையம் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் (72). இவருடைய தம்பி, கிருஷ்ணன் (65). விவசாயிகள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, உள்ளூரில் சொந்தமாக 6.50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர்களுடைய நிலத்திற்கு அருகில், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் குணசேகரன் (42) என்பவருக்கும் விவசாய நிலம் உள்ளது. இவர், கண்ணையன் சகோதரர்களிடம் அவர்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக குடைச்சல் கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் குணசேகரன், அவர்களுடைய விவசாய நிலத்திற்கு வேலை செய்ய வரும் பெண்களை மிரட்டுவது, கிழக்கு பிடுங்க வரும் புரோக்கர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி, சென்னையில் உள்ள மத்திய அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அவர்களுக்கு ஒரு அழைப்பாணை கடிதம் வந்துள்ளது.
இதுகுறித்த விவரம் தெரியாத அவர்கள், கடிதத்தை எடுத்துக்கொண்டு உள்ளூரைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் கண்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் அரங்க.செல்லதுரை, தலித் பிரவீணா ஆகியோரிடம் சென்று காட்டியுள்ளனர். அவர்கள் மூலம்தான், அமலாக்கத்துறை அழைப்பாணையின் முழு விவரமும் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. பண மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ ஆக்ட்) பிரிவு 50 (2) மற்றும் 50 (3) ஆகியவற்றின் கீழ், 5.7.2023ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலம் வாங்கியதற்கான பணம் எப்படி கிடைத்தது? அதற்கான ஆதாரங்கள் தொடர்பான ஆவணங்களை விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை 1000 ரூபாய் மற்றும் ரேஷன் அரிசியை சாப்பிட்டு வரும் மிகச்சாதாரண விவசாயிகளுக்கு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அழைப்பாணை வந்ததால் அவர்கள் அரண்டு போனார்கள். மேலும், அந்த அழைப்பாணை கடிதத்தின் மேலுறையிலேயே, விவசாயிகளின் பெயருக்கு அருகில், அவர்களின் மதம், சாதியின் பெயரையும் அப்பட்டமாக எழுதப்பட்டு இருந்தது. அழைப்பாணை கடிதம், மேலுறைகளில் இப்படி ஒருவரின் பெயருடன் சாதி, மதத்தை பட்டவர்த்தனமாக குறிப்பிடுவது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்று என்பதால் அமலாக்கத்துறையின் இந்த நடைமுறை வழக்கறிஞர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனால், அமலாக்கத்துறை விசாரணையின்போது விவசாயிகளை அழைத்துச்சென்ற இரு வழக்கறிஞர்களையும், அவர்கள் சார்பில் ஆஜராக அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்து 6 மாதம் கழிந்த நிலையில், தற்போது இதன் பின்னணியில் பாஜக நிர்வாகி குணசேகரனுக்கு தொடர்பு இருப்பதும், அவரின் தவறான தகவலால்தான் அமலாக்கத்துறை இதுபோன்ற அழைப்பாணை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக நிர்வாகி குணசேகரனிடம் விசாரித்தோம். ''அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில ஆண்டுக்கு முன்பு கண்ணையனும், கிருஷ்ணனும் காட்டு எருமைகளை கொன்று தங்கள் நிலத்தில் புதைத்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அப்படி ஒரு அழைப்பாணைக் கடிதத்தை அனுப்பி இருக்கலாம்'' என்றார் குணசேகரன்.
அத்துடன், ''ஏன் சார்... நான் ஒரு கட்சியின் சாதாரண மாவட்டச் செயலாளர். நான் சொன்னால், அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி விடுமா? ஊடகங்கள் சிந்திக்க வேண்டாமா?” என கிண்டல் தொனியிலும் எதிர் வினா எழுப்பினார்.
இது ஒருபுறம் இருக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சேலத்தில் நடை பயணத்தில் இருந்தபோதும், பின்னர் மதுரையிலும் ஊடகத்தினரிடம் அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பிய விவகாரம் குறித்து பேசியிருந்தார். ''கண்ணையன் சகோதரர்கள், ஒரு காலத்தில் காட்டெருமைகளை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமலாக்கத்துறைக்கு வனத்துறை தொடர்பான குற்ற வழக்குகளை எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேநேரம், அமலாக்கத்துறை அளித்துள்ள நோட்டீஸில் சாதி பெயர் உள்ளதை பாஜக ஏற்கவில்லை. ஆனால், அமலாக்கத்துறைக்கு அனுப்பியுள்ள எப்.ஐ.ஆரில் சாதி பெயர் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் அப்படி குறிப்பிட்டு இருக்கலாம். மேலும், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகி பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறார். அமலாக்கத்துறைக்கு அவருக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது. அவர் எப்படி அமலாக்கத்துறையிடம் சொல்லி சோதனை நடத்தச் சொல்லி இருப்பார்?'' என தெரிவித்தார்.
நம்மிடம் பாஜக நிர்வாகி குணசேகரன் கூறியதை, அப்படியே அண்ணாமலை என்ற முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் செய்தியாளர்கள் சந்திப்பில் சொல்லியுள்ளார்.
ஏற்கனவே அண்ணாமலை, கர்நாடகா மாநிலத்தில் காவல்துறை எஸ்பி ஆக பணியாற்றியபோது, 2 லட்சம் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாக கூறியது சர்ச்சை ஆனது. தன் வாழ்நாளில் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளதாகவும், மோடி ஆட்சியில் குண்டு வெடிப்பே நிகழவில்லை எனவும், ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்தார் என்றும், முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்தார் என்றும், வல்வில் ஓரியை சுதந்திர போராட்ட தியாகி என்று பேசியவர் தானே அண்ணாமலை என பேச்சுகளும் இருக்கின்றன.
வனத்துறை தரப்பில் இருந்து அமலாக்கத்துறைக்கு ஏதேனும் கண்ணையன் சகோதரர்கள் மீதான வழக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் சரக வனத்துறை அதிகாரி அல்லிராஜிடம் கேட்டோம். ''விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் தோட்டத்தில் மின்சார வேலி போட்டிருந்தனர். இந்த வேலியில் சிக்கி இரண்டு காட்டெருமைகள் இறந்துவிட்டதாக அவர்கள் மீது கடந்த 2017ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காட்டெருமைகள் ஷெட்யூல்-1 பிரிவில் வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீது பிணையில் விடக்கூடாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஆவணங்கள் எதுவும் எங்கள் தரப்பில் இருந்து அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அதேபோல், நாங்கள் எப்.ஐ.ஆரில் சாதி பெயர்களையும் பதிவு செய்வதில்லை.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பலர், ஒரே பெயரில் இருக்கும்பட்சத்தில் அவர்களை துல்லியமாக குறிப்பிட ஊர், தெரு, சாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை அரிதாக பதிவு செய்வோம். ஆனாலும் கண்ணையன் சகோதரர்கள் வழக்கில் அப்படி எதையும் நாங்கள் குறிப்பிடவில்லை. அழைப்பாணையிலும் சாதி விவரங்களை குறிப்பிட மாட்டோம். மற்றபடி, வனத்துறை வழக்குகளை அமலாக்கத்துறை எடுத்து விசாரிக்கலாமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது'' என்றார் வனத்துறை அதிகாரி அல்லிராஜ்.
வனத்துறை வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருப்பதாகக் கொண்டாலும், 2017ல் நடந்த சம்பவம் குறித்து இப்போது ஏன் விசாரிக்க வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. அது தொடர்பான விவரங்கள் எதுவும் அழைப்பாணையில் குறிப்பிடப்படவில்லை. ஆக, பாஜக பிரமுகரும், அமலாக்கத்துறையும் கூட்டு சேர்ந்து கொண்டு சேர்வராயன் மலை அடிவாரத்தில் செழிப்பான பூமியாக இருக்கும் ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பதற்காகவே இந்த கூத்துகள் நடந்துள்ளதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து முழுமையாக விசாரிக்காமலேயே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழக்கம்போல் அமலாக்கத்துறையின் அழைப்பாணை விவகாரத்திலும் பேசியிருப்பதாக பா.ஜ. கட்சியினரே சொல்கிறார்கள்.