தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா மசோதா திருப்தியளிக்கிறதா? நீதிமன்றம் கெடு விதித்த 10ஆம் தேதிக்கு முந்தைய நாள் அவசர அவசரமாக இதை செய்திருக்கிறார்களே, இவ்வளவு தாமதம் ஏன்? இதன் செயல்பாடு வேகமாக இருக்குமா? இதில் என்னென்ன குறைகள்? அரசு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களும், பணியாளர் நியமனமும் இந்த லோக் ஆயுக்தாவின் கட்டுப்பாட்டில் வராது என்று குறிப்பிடப்பட்டுள்ளதே? வலிமை மிக்கதாக இது உருவாக என்னென்ன விஷயங்கள் சேர்க்க வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கு நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார் பா.ம.க. செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு.
லோக் ஆயுக்தா கொண்டுவர வேண்டும் என்று பாமக உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் ஏன் லோக் ஆயுக்தா கொண்டுவரப்படவில்லை என்று கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கெடுவும் விதித்தது. லோக் ஆயுக்தாவை தமிழக அரசு தானாக கொண்டுவரவில்லை. நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிர்பந்தத்துடன்தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
அதிலும் இந்த லோக் ஆயுக்தாவை கொண்டு வந்தது, உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதற்காகவும், ஊழல் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான ஒரு நல்ல நோக்கத்திற்கான முயற்சியாக இது தெரியவில்லை. தமிழக முதலமைச்சரும் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்புக்குள் வருவார் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முதலமைச்சரும் ஓர் அமைச்சராகக் கருதப்படுவார் என்று 2(1)(ஐ)-பிரிவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் மட்டுமே முதலமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் படி லோக் ஆயுக்தாவைக் கோர முடியும். இந்தக் குழப்பத்தை முதலமைச்சர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய அமைப்பில் முதல் அமைச்சர், சட்டமன்ற தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என இவர்கள் மூன்று பேர் உள்ளனர். தமிழகத்தில் தகவல் உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இத்தகைய குழுவே தேர்ந்தெடுக்கிறது. இதற்கான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க முடியாத சூழலை உருவாக்கி, ஆளுங்கட்சிக்கு சாதகமானவர்களை தேர்வு செய்வதே வழக்கமாக உள்ளது. மூன்று பேரில் இரண்டு பேர் எடுக்கும் முடிவே இறுதியாக உள்ளது. அதே நிலைமைதான் லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியமனத்திலும் தொடரும். ஆளுங்கட்சியை ஆதரிப்பவர்களை நியமிப்பார்கள். இது மிக மிக தவறானது.
ஆகவே லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய குழுவில் ஐந்து பேர் இருக்க வேண்டும். நடுநிலையான, நேர்மையான, அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி விசாரிக்கக்கூடிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் அதற்கு வழிவகுக்கவில்லை.
அரசு அலுவலங்களில் நடைபெறும் டெண்டர், உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்படக்கூடிய ஊழல்களை விசாரிப்பதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசு அலுவலகத்தில் நடைபெறும் ஊழல்கள், அரசு அதிகாரிகள் செய்யக்கூடிய ஊழல் புகார்களை லோக் அயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது. தமிழக அரசின் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்து, அதில் முகாந்திரம் இருப்பதாக அவர் கருதினால் மட்டுமே அப்புகார் லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சொல்வது தவறானது. இங்கு இருக்கக்கூடிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் இந்த அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதை செய்பவராகத்தான் இருப்பார். பொய் புகார் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஒராண்டு சிறை தண்டனை என்பது, ஊழல் தொடர்பாக புகார் கொடுக்க முன்வருபவர்களை மிரட்டும் வேலையாக இருக்கிறது. இப்படி சொன்னால் புகார் கொடுக்க யார் முன் வருவார்கள்?.
இதன் தலைவராக யார் இருக்க வேண்டும் என்றால், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி. அந்த நிலையில் இருப்பவர்கள்தான் இதற்கு தலைவராக இருக்க வேண்டும். ஆனால் இதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இருக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை ஆளும் கட்சியினர் தேர்ந்தெடுத்துக்கொள்வார்களே...
தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையம் என்பது நிர்பந்தத்திற்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது. நாங்களும் கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் நினைப்பது என்னவென்றால், லோக் ஆயுத்தா என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தில் நான் சொன்ன விஷயங்களை உரிய சட்ட திருத்தங்கள் மூலமாகவும், நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாகவும் உள்ளே புகுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் காலத்தில் இந்த சட்டம் கடுமையாக்கப்படும். இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
அந்த வகையில் இந்த சட்டம் தமிழகத்தில் மிக மிக அவசியமானது. ஏனென்றால் இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழல், இலவசம், மது ஆகியவைதான் தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. நிர்பந்தத்தினால் இந்த லோக் ஆயுத்தா வந்திருந்தாலும்கூட, ஊழல் செய்தவர்கள் இதன் முன்பு நிறுத்தப்படுவார்கள். லோக் ஆயுத்தாவில் விரைந்து வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும். இன்னொன்று முக்கியமானது, நடுநிலையாக செயல்படுகிறது என்ற அபிப்ராயத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
லோக் ஆயுக்தா, ஆளும் கட்சியினுடைய துணை அமைப்பாக இருந்துவிடக்கூடாது. அப்படி இருந்தால் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வோம். நாங்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் சட்டத்தில் இல்லை என்று சொன்னாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக உள்ளே கொண்டு வருவோம். ஊழல் செய்பவர்கள் யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.