Skip to main content

துரோகி கேரக்டரில் நடிப்பதா? எதிர்ப்புச் சுழலில் சிக்கிய விஜய்சேதுபதி! 

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Muttiah Muralitharan


கிரிக்கெட் வீரர்களுக்கான பயோபிக் படங்களில் தோனி, சச்சின், அசாருதின், கபில்தேவ் என்று பயோபிக் படங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் வீழ்த்திய விக்கெட்டுகளைக் குறிக்கும் வகையில் '800' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.


 
முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

முத்தையா முரளிதரன் இலங்கைத் தமிழர்தான் என்றாலும், அவர் சிங்களக் கொடி பொறித்த சீருடையுடன் இலங்கை அணிக்காக விளையாடியவர். அந்த அணியில் ஒற்றைத் தமிழராக அவர் சாதித்திருக்கிறார் என்றாலும், ஈழத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் குறித்து அக்கறை செலுத்தியதில்லை. விளையாட்டு வீரராக மட்டும் இருந்திருந்தால், அவரது வரலாற்றுப் படத்திற்கு இத்தனை எதிர்ப்பு இருந்திருக்காது. போர் முடிந்த நிலையில், ராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவானவராக இருந்தார் என்பதுதான் தமிழர்கள் அவர் மீது காட்டும் எதிர்ப்புக்கு காரணம்.

 

சிங்களன் எதிரி என்றால், தமிழரான முத்தையா முரளிதரன் துரோகி என்பது அவர் களின் பார்வை.

 

இப்போதும் கூட, தமிழர்களைக் கொன்று குவித்த அன்றைய இலங்கை அதிபரும் இன்றைய இலங்கை பிரதமருமான மஹிந்த ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சே, முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், "திரைக்கதை ரெடியானவுடன், நாங்கள் இதற்கு விஜய் சேதுபதியை நடிக்க வைக்கதான் யோசித்தோம். அவர் ஒரு திறமையான நடிகர் என்று நான் நினைக்கிறேன். அவர் முழுமையான நடிகர் என்று நம்புகிறேன். மேலும், அவர் கண்டிப்பாக படத்திற்கான அதிசயத்தை நிகழ்த்துவார்'' என்றார்.

 

ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் போஸ்டர்களில் முத்தையா முரளிதரனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது விஜய்சேதுபதியின் கெட்டப். தமிழில் எடுக்கப்படும் '800' படம், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹிந்தி மற்றும் சிங்கள மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.

 

Ad

 

படத்தைப் படமாகத்தான் பார்க்க வேண்டும். இதில் அரசியல் பார்வை வேண்டாம் என்கிறது முத்தையா முரளிதரனுக்கு ஆதரவான குரல்கள். ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையுள்ளவர்களோ, ராஜபக்சேக்களை ஆதரித்து நின்றவரின் அரசியல் விளையாட்டை எப்படி அரசியல் கலக்காமல் பார்க்க முடியும் என்கின்றனர்.

 

அத்துடன், இலங்கை சிங்கள அரசு என்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் எதிரானதல்ல, தமிழகத்தில் உள்ள மீனவர்களையும் சுட்டுக் கொன்ற கொடூர அரசு. அந்த அரசாங்கத்தின் அடையாளமான சிங்கம் முத்திரை பொறித்த நீலநிற ஜெர்ஸியில் தமிழக நடிகரான விஜய்சேதுபதி நடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? துரோகி கேரக்டரில் நடிப்பதும் துரோகம் தானே? என்கின்றனர்.

 

கோபத்துடனும் வேகத்துடனும் கோரிக்கையுடனும் இந்தப் படத்தில் நடிப்பதை கைவிடுமாறு விஜய்சேதுபதிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சுழற்பந்து வீச்சாளர் பற்றிய படத்தில் ஹீரோவாகி எதிர்ப்புச் சுழலில் சிக்கியுள்ள விஜய்சேதுபதி எடுக்கும் முடிவு நல்லதாகவே இருக்கும் என நம்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்