அதிமுகவில் தற்போதைய சூழ்நிலையில் ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, டி.டி.வி.தினகரன் அணி என உள்ளன. மேலும் இந்த மூன்று அணிகளையும் பிடிக்காத ர.ர.க்களும் உள்ளனர். 2021 தேர்தலை சந்திக்க ஓரளவு நெருங்கிவிட்ட நிலையிலும் அதிமுக அணிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. ஏற்கனவே பெற்ற வெற்றி ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்தது. தற்போது அதிமுக இப்படி பிரிந்து ஈகோ யுத்தமாக நடைபெறுதால் தேர்தலை சந்தித்தாலும் வெற்றி எப்படி இருக்கும் என்று ர.ர.க்கள் கவலையில் உள்ளனர்.
இந்தநிலையில் கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிளிலும் திமுக வெற்றி பெறும் என்றதோடு, இந்த சவாலுக்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம் என்று அதிரடியாக கூறி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''2021ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் ஆட்சி அமையும். 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். நான்கு தொகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்.
ஆளும் கட்சிக்காரர்கள் என்கிட்டேயோ அல்லது வேறுயாருக்கிட்டேயோ சேலஞ்ச் பண்றதுக்கு, சவால் விடுவதற்கு, பந்தயம் கட்டுவதாக இருந்தால் சொல்லுங்கள் நாங்க ரெடியா இருக்கிறோம். நாங்கள் சவாலுக்கு ரெடியா இருக்கிறோம். நான்கு தொகுதியிலும் தொகுதிக்கு தலா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு தொகுதியிலும் வெற்றி பெறுவோம். யாராவது சேலஞ்ச் பண்ணா சொல்லுங்க சேலஞ்ச் பண்ணுவோம்.
ஏற்கனவே அரவக்குறிச்சியில் சேலஞ்ச் பண்ணினோம். ஒருத்தர் வீர வசனம் பேசினார். டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலைவிட்டு போய்விடுகிறேன் என்றார். இப்ப அந்த வீரவசனமெல்லாம் வரட்டும், களத்திற்கு வரட்டும். இப்ப சொல்றேன், அடிச்சு சொல்றேன் நான்கு தொகுதியிலும் திமுக ஜெயிக்கும், உதயசூரியன் ஜெயிக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்'' என்றார்.
சேலஞ்ச் செய்கிறேன், சவால் விடுகிறேன், பந்தயம் கட்ட தயார் என்று செந்தில் பாலாஜி அறிவித்தது கரூர் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் மாவட்டத்தில் அதிமுகவுக்கு உள்ள பலம், பலவீனம் எல்லாம் செந்தில்பாலாஜிக்கு தெரியும், அதனால்தான் இவ்வளவு நம்பிக்கையாக சவால் விடுகிறார் என்கின்றனர் திமுகவினர்.