
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குட்பட்ட 36 குடியிருப்புகளுக்குக் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட கமலீஸ்வரன் கோயில் தெருவில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 24 தங்கும் அறைகள், கலையரங்கக்கூடம், உணவருந்தும் கூடம், சுற்றுச்சுவர், வாகன நிறுத்தம் போன்ற பணிகள் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அதேபோல் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 168 மாணவிகள் தேர்விற்குத் தயாராகி வருகின்றனர். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே கான்சாகிப் வாய்க்கால் இடது கரையில் 310 மீட்டர் நீளத்தில் ரூ 9 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
கனகசபை நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மாலைகட்டிதெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், ஸ்மார்ட் வகுப்பின் வாயிலாக மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் முறைகள், தேர்ச்சி விகிதம் குறைவான மாணவர்களுக்குக் கூடுதல் சிறப்பு வகுப்புகள் வழங்கி தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மானா சந்து மற்றும் சம்பந்தகார தெரு அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் விளையாட்டுடன் கல்வி கற்றிடும் வகையில் கற்பித்திட ஆசிரியர்களுக்கும், பயிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க சத்துப் பொருட்களை வழங்கிட பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது” எனக் கூறினார். அப்போது நகராட்சி ஆணையர் மல்லிகா, நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் காந்தரூபன், தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமார்ராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.