
தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுரடி வீட்டுமனையைத் தமிழக அரசின் விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவி பர்வீன், அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராகத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி தவிர மற்ற 6 பேர் மீதான வழக்கு உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டன. அதே சமயம் அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான வழக்கு மட்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ஐ. பெரியசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதிடுகையில், “இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டது.
வீட்டு மனையை ஒதுக்கியதில் அரசுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர் என்பதால் வழக்கு தொடர அனுமதி அளிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கும்போது, சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் அமர்வில் இன்று (04.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஜான் சத்யன் கடந்த முறை முன்வைத்த வாதத்தையே இன்றும் முன் வைத்தார். இதனையேற்றுக் கொண்ட நீதிபதி இளந்திரையன் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.