Skip to main content

வேலூர் தேர்தல் ரத்து பீதியில் வேட்பாளர்கள்!

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சம் வேலூர் மாவட்டம் என்பதுபோல, பிரச்சாரத்திலும் பிரச்சினைகளிலும் மற்ற தொகுதிகளைவிட வேலூர் தொகுதி தகிக்கிறது. இரட்டை இலையில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கடந்தமுறை போல குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக கச்சிதமாக காய் நகர்த்துகிறார். தன்னை எதிர்த்து தி.மு.க.வே நேரடியாக களமிறங்குகிறது, துரைமுருகன் மகன் நிற்கிறார் என்றதும், தி.மு.க.வில் உள்ள தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழுக்க முடியாது என ஏ.சி.எஸ். நினைத்தார். ஆனால், "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல கரைத்துவிட்டார்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

 

duraimurugan kathir



ஏ.சி.சண்முகம் தனது மகனுக்கு குடியாத்தம் நகரில்தான் பெண் எடுத்தார், அவரது சம்மந்தி வீடு அங்குதான் உள்ளது. இதனால் அவர்மூலமாக தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து குடியாத்தம் தொகுதியை சேர்ந்த 6 தி.மு.க. பிரமுகர்களை லம்பாக கவனித்துள்ளார், இதனால் அவர்கள் மறைமுகமாக, "குடியாத்தம் இடைத்தேர்தலில் சூரியனில் வாக்களிங்க, எம்.பி.க்கு இரட்டை இலையில் ஓட்டுப்போடுங்க' என தங்கள் சாதி மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். கடந்தவாரம் தனியார் கல்லூரி ஒன்றில் முதலியார் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கலந்துக்கொண்ட ஒரு தி.மு.க. பிரமுகர், ""கட்சி பார்க்காம நம்ம சாதியை சேர்ந்த ஏ.சி.எஸ். வெற்றிக்காக உழைப்போம்'' என பேசியுள்ளார். 

 

shanmugam



முஸ்லிம் ஓட்டுகள்தான் தி.மு.க.வுக்கு பலம். அதனால் அதனை உடைக்க வேண்டும் என களமிறங்கி ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு பகுதியின் பிரபலமான தோல் தொழிற்சாலை அதிபர்களை சந்திக்க முயன்றார். அவர்கள் பிடிகொடுக்காமல் நழுவினர். இதுப்பற்றி எடப்பாடியிடம் சொல்ல... உடனே அமைச்சர் வீரமணி மூலமாக தொழிலதிபர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இப்படி திட்டமிட்டு காய் நகர்த்தி தொகுதியில் பிரச்சாரம் செய்யும் ஏ.சி.எஸ்., ""6 சட்டமன்ற தொகுதியிலும் 6 இலவச கல்யாண மண்டபம் சொந்த செலவில் கட்டித்தருவேன், தொகுதிக்கு 100 பிள்ளைகளை என் கல்லூரியில் சேர்த்து இலவசக் கல்வியை தருவேன், பெங்களூரூவில் உள்ள தனது மருத்துவமனையில் இலவச மருத்துவம்'' என வாக்குறுதிகளாக வாரியிறைத்து வருகிறார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரிடம் "என்னை வெற்றிபெற வைத்தால் வெளிநாட்டுக்கு உங்களை டூர் அனுப்பி வைப்பேன்' என உத்தரவாதம் தந்துள்ளார். 

ஆனாலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் ஒரு வெறுப்பே உள்ளது. காரணம், தேர்தல் பணிக்காக தனது கல்லூரியில் இருந்து ஆட்களை கொண்டு வந்து தொகுதியில் இறக்கியுள்ளார். அவர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் சகிதமாக உட்கார்ந்து கொண்டு பணம் கேட்டு கட்சியினர் வந்தால் கார்ப்பரேட் அலுவலகம் மாதிரி என்ன செலவு?, எவ்வளவு பேர் வருவாங்க? இதுல கையெழுத்து போடு, என்னன்ன செலவுன்னு எழுதித் தாங்கன்னு அக்கப்போர் பண்ணுகிறார்களாம். 

தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், பிரச்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறார். தினமும் ஒரு ஒன்றியம் என கணக்கு வைத்துக்கொண்டு கொளுத்தும் வெயிலில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதே பகுதியில் ஏசி காரில் வந்து, கூரை அமைத்த வேனில் ஏறி பிரச்சாரம் செய்யும் ஏ.சி.சண்முகத்தை பார்ப்பவர்கள், "இந்தப் பையன் பரவாயில்லப்பா' என கதிர்ஆனந்த் பற்றி பேசுவது தி.மு.க. தரப்பில் தெம்பை தந்துள்ளது.   

அவரது தந்தையான தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்ற வேலைகளை கவனித்துக்கொள்கிறார். தனது கட்சியினர் யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளார்களோ, அவர்களையெல்லாம் சந்தித்து கூல் செய்கிறார். "கடந்த தேர்தலில் தனது மகனுக்கு சீட் தரவில்லையென நமது வேட்பாளரான அப்துல்ரகுமானை விரட்ட வைத்ததன் பின்னணியில் இருந்த துரைமுருகன் மகனின் வெற்றிக்காக நாம் வேலை செய்ய வேண்டுமா' என ஒரு பிட் நோட்டீஸ் தொகுதியில் உலாவந்தது. இதனைப் பார்த்து ஷாக்கான துரைமுருகன், முன்னாள் எம்.பி. அப்துல்ரகுமானை வேலூருக்கு வரவைத்தார். அவர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், வேலூர் பகுதியில் உள்ள ஜமாத் மற்றும் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து, ""அப்போதைய பிரச்சனை வேறு... இப்போது பிரச்சனை வேறு. மோடி ஆட்சிக்கு வரக்கூடாது, அதனால் திமுகவுக்கு வேலை செய்யுங்கள்'' என சமாதானப்படுத்தியுள்ளார். 

 

duraimurugan



"முதலியார்கள் ஓட்டு முதலியாருக்குத்தான் போடுவோம்னு அந்த அமைப்புகள் முடிவெடுக்கும்போது, நீங்க எப்படி முடிவெடுக்கறதுன்னு நீங்களே யோசிங்க' என வன்னியர்கள் அதிகமாக வாழும் அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்பாடி தொகுதிகளில் தி.மு.க.வில் உள்ள வன்னிய பிரமுகர்கள் திண்ணைப் பிரச்சாரம் செய்கின்றனர். 

"இந்த கடுமையான போட்டியில் உங்களோடு நானும் மோதுகிறேன் பார்' என அ.ம.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீசை பாண்டுரங்கன் களமிறங்கியுள்ளார். நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர். தொகுதியில் கணிசமாக உள்ள நாயுடு ஓட்டுகள் மற்றும் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து பிரச்சாரம் செய்கிறார். கதிர் ஆனந்தா, ஏ.சி.எஸ்.ஸா என்ற கடும் போட்டி, கடைசிவரை நீடிக்கிறது.