அவர்தான் நெல்லை மாநகராட்சியின் முதல் மேயர். அதுவும், பெண் மேயர். நெல்லை நகராட்சியை 1996-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் மாநகராட்சியாக தரம் உயர்த்திய போது, தேர்தலில் வெற்றி பெற்று முதல் மேயரானவர் தி.மு.க.வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர் மேயராக இருந்த காலத்தில் நெல்லை மாநக ரில் பல சிறப்பான திட்டங்களை அமல்படுத்தியவர். மேயர் பதவிக்காலம் முடிந்த பின், சட்டமன்றத் தேர்தலிலோ, பாராளுமன்றத் தேர்தலிலோ போட்டியிடுவதற்கு கட்சித் தலைமையிடம் விருப்ப மனு போட்டு பணமும் கட்டுவார். ஆனால் புதியவர்கள் போட்டியிட வேண்டும் என்பதால், சீட் கேட்டு வலியுறுத்தமாட்டார். பதவி இல்லா விட்டாலும், நெல்லை மக்களுக்கு "மேயர்' என்றால் உமா மகேஸ்வரிதான் நினைவுக்கு வருவார்.
உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் ஏ.டி.யாக இருந்து ஓய்வு பெற்றவர். உமா மகேஸ்வரி-முருகசங்கரன் தம்பதிகளுக்கு சரவணன், கார்த்திகா, பிரியா என மூன்று வாரிசுகள். இதில் சரவணன், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தொன்றில் மரணமடைந்தார். பக்கத்திலேயே வசிக்கும் மூத்த மகள் கார்த்திகா, நாகர்கோவில் -ஆரல்வாய் மொழியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இளையமகள் பிரியா இன்ஜினியராக இருக்கும் தனது கணவருடன் திருச்சியில் வசித்துவருகிறார். நெல்லை இன்ஜினியரிங் கல்லூரி அருகில் உள்ள தனது வீட்டில் கணவர் முருக சங்கரனுடன் வசித்து வந்தவர் உமா மகேஸ்வரி. வீட்டு வேலைக்கு ஒத்தாசையாக மாரியம்மாள் என்ற பெண் தினமும் மூன்று மணி நேரம் உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு வந்து போவார்.
ஜூலை 23-ஆம் தேதியன்று, மாலை கல்லூரி முடிந்து திரும்பிய கார்த்திகா வழக்கம்போல் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டுப் படியேறி கதவில் கை வைத்ததுமே, கதவு இடுக்கு வழியே ரத்தம் வழிந்த திட்டுக்களைப் பார்த்து உறைந்துவிட்டார். மனதை திடப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் சென்றபோது தாய் உமா மகேஸ்வரி ஹால் பகுதியிலும், அதன் எதிரே இருந்த பெட்ரூமில் தந்தை முருகசங்கரனும், சமையலறையில் வேலைக்காரப் பெண் மாரியம்மாளும் ரத்தச் சகதியில் கிடந்ததைக் கண்டு அலறித்துடித்தபடி, போலீசுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார் கார்த்திகா. தகவல் வந்த சில நிமிடங்களிலேயே, போலீஸ் படையுடன் ஸ்பாட்டுக்கு வந்தார் மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன். வீட்டை சலித்தெடுத்தது போலீஸ். மோப்ப நாயும் வீட்டிலிருந்து வெளியே சிறிது தூரம் ஓடி, மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டது. மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலைக் கூலிப்படையைத் தேடிவருகிறார்கள்.
பணிப்பெண் மாரியம்மாளுக்கு கணவர் இறந்துவிட, 3 பிள்ளைகளை தன் உழைப்பால் வளர்த்து வந்தார். படுகொலை யால் அவர் குடும்பம் பரிதவிப்பதை உணர்ந்து தி.மு.க. தரப்பிலும் அரசுத் தரப்பிலும் முதல்கட்ட உதவி செய்யப்பட்டுள்ளது. தனிப்படையில் இருக்கும் நமக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் பேசி னோம். ""உமா மகேஸ்வரியின் கழுத்தில் ஆழமான வெட்டு விழுந்துள்ளது. அவரது கணவரின் கைகளில் பல வெட்டுக்கள் விழுந்துள்ளன. வேலைக்காரப் பெண்ணின் பின் மண்டையில் பலமான வெட்டுக்கள் விழுந்துள்ளன. உமா மகேஸ்வரியின் கம்மல் கள், செயின், வளையல்கள், பீரோவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளன. இதைவிட முக்கியம், பெட்ரூமில் உள்ள கப்போர்டில் பெரிய தோல்பையில் இருந்த உமா மகேஸ்வரியின் நகைகளும் மகள் கார்த்திகாவின் நகைகளும் மாயமாகியுள்ளன. அந்த கப்போர்டில் நகை இருக்கும் விபரம் வீட்டிற்கு வந்துபோகும் பழக்கமுள்ளவர்களுக்குத்தான் தெரியும். இந்த கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்கிறோம்''’என்றார்.
இது ஆதாயக் கொலைதான், கொடுக்கல்-வாங்கல் பிரச்சினைதான் என விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் நெல்லை போலீசார் சொன்னதைக் கேட்டு டென்ஷனாகிவிட்டதாம் டி.ஜி.பி. அலுவலகம். அதன் பின்தான் விசாரணையின் கோணத்தை மாற்றியிருக்கிறது தனிப்படையின் மற்றொரு டீம். அந்த டீமிலிருக்கும் அதிகாரி நம்மிடம், ""கொலையாளிகள் வீட்டிற்குள் உட்கார்ந்து ஆற அமர பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்தான் கொலை நடந்திருக்கிறது. உமா மகேஸ்வரியின் வீட்டருகே இருக்கும் ஒரு புரோட்டா கடையிலும் பெந்தகொஸ்தே சர்ச்சில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜிலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதேபோல் இந்த விவகாரத்தில் பெண்கள் மூவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண்ணின் செல்போன் டவர் மதுரையை அடையாளம் காட்டியிருப்பதால், ஒரு டீம் மதுரைக்கு விரைந்துள்ளது. விரைவில் கொலையாளிகள் சிக்குவார்கள்''’என்றார்.
இந்நிலையில், இந்தக் கொலைக்கு யார் காரணகர்த்தாவாக இருக்கமுடியுமென சந்தேகித்து, பல கேள்விகளுடன் விசாரித்து வந்த காவல்துறைக்கு 2006ம் ஆண்டு TN 07… எனும் எழுத்தைத் தொடக்கமாகக் கொண்ட ஸ்கார்பியோ கார் ஒன்று தடயமாக சிக்க, அதனின் உரிமையாளரான சைக்கோத்தனமான குற்றவாளி ஒருவன் சிக்கியுள்ளான். விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவன் முருகக் கடவுளின் பெயர் கொண்டவன் என்றும், அவன் மீது தூத்துக்குடி கயத்தாறு காவல் நிலையத்திலும், நெல்லை பணவடலி சத்திரத்திலும் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கும் உள்ளதாக தகவல் கசிகின்றது.
மேலும், கொலைத் தகவல் கேள்விப்பட்டதும் நெல்லை விரைந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கொலையான வர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீடியாக்களிடம் பேசியபோது, இந்த ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது''’என்றார். முன்னாள் மேயரின் படுகொலையில் உள்ள மர்ம முடிச்சுகள் பல கோணங்களில் ஆராயப்பட வேண்டியவை. திருட்டு, பகை, சதி இவற்றில் எது 3 உயிர்களைப் பறித்தது என்பதை உண்மையான விசாரணையே வெளிக் கொண்டுவரும்.
- நாகேந்திரன்