ஒருநாள்கூட சிறைக்குச் செல்லாமல் அண்ணாச்சி இறந்து போனதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் கணவரின் (பிரின்ஸ் சாந்தகுமார்) ஆத்மா சாந்தி அடையாது. எனக்கும் இந்த மரணம் ஆறாத வடுவாகிவிட்டது''’என்று இந்த நிலையிலும் சொல்கிறார் ஜீவஜோதி. அவர் சொல்லாமல் விட்டவை ஏராளம் என்கின்றனர் முழு விவகாரத்தை அறிந்தவர்கள். சாந்தகுமார் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் "சந்தர்ப்ப சாட்சியங்களைப் பார்க்கும்போது, ஜீவஜோதியை அடைவதற்கு ராஜ கோபாலுக்குத் தூண்டுதலாக இருந்ததே ஜீவஜோதியின் தாயார் தவமணிதான் என்பது தெரிய வருகிறது. ஜீவஜோதியைத் திருமணம் செய்து வைப்பதாக ராஜகோபாலுக்கு ஆசையை ஊட்டியதே ஜீவஜோதியின் தாயார் தவமணிதான் என்று தெரிய வருவதால் அவரும் குற்றவாளிதான்'’என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1994-ல் பிழைப்பு தேடி தங்கள் குடும்பம் சென்னை வந்ததாகவும், சொத்தை விற்று கையில் இருந்த பணத்தை ராஜகோபாலிடம் கொடுத்து மாதம் ரூ.7000 வட்டி வாங்கி வந்ததாகவும், பிறகு, தந்தை ராமசாமிக்கு சரவணபவனில் வேலை கொடுத்து, கே.கே. நகரிலுள்ள சரவணபவன் ஊழியர் குடியிருப்பில் தாங்கள் வசிப் பதற்கு ராஜகோபால் முன் னின்று ஏற்பாடு செய்ததாகவும் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஜீவஜோதி. ஆக, 13 வயதிலிருந்தே ஜீவ ஜோதிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ராஜகோபால் ஆதரவளித்து வந்திருக்கிறார்.
அண்ணாச்சி ராஜகோபால் வந்துபோன அந்த வீட்டில் தான், இன்னொருபுறம் டியூசன் ஆசிரியர் பிரின்ஸ் சாந்தகுமாருடனான காதலை வளர்த்திருக்கிறார் ஜீவஜோதி. அவர்களின் காதலைக் கடுமையாக எதிர்த்தார் தவமணி. ராஜகோபாலும், சாந்தகுமார் வருவதை நிறுத்தாவிட்டால், சரவணபவன் ஊழியர் குடியிருப்பிலிருந்து ஜீவஜோதி குடும்பம் காலிபண்ண வேண்டும் என்று எச்சரித்தார். ஆனாலும், ஜீவஜோதியும் சாந்த குமாரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். அண்ணாச்சியும் தன் அம்மாவும் விரும்பாத திருமணத்தை செய்து கொண்ட பிறகும், அண்ணாச்சியை தேடி வந்து, டிராவல்ஸ் பிசினஸ் தொடங்குவதற்காக பணம் கேட்டார் ஜீவஜோதி. ராஜகோபாலும் பழைய பாசத்தை விட்டுவிட மனமில்லாமல் உதவி செய்து, டிராவல்ஸ் அலுவலகத்தையும் அவரே திறந்து வைத்தார்.
அந்த நேரத்தில், சாந்தகுமார் அளித்த ஊக்கத்தில் சினிமாவில் நடிப்பதற்கு ஜீவஜோதி தயாரான போது, ராஜகோபால் தனக்கு அது பிடிக்கவில்லை என எதிர்ப்புக் காட்டியுள்ளார். ஜீவஜோதி அதை ஏற்கவில்லை. இந்த நிலையில்தான், அண்ணாச்சி ராஜகோபாலை சுற்றி இருந்தவர்கள், உங்களைப் பணம் காய்ச்சி மரமாக அந்த பொண்ணு நினைக்குது'’என உசுப்பேற்ற, அவர்களின் தூண்டுதலிலேயே சாந்தகுமார் கடத்தலும் கொலையும் நடந்து, அண்ணாச்சியை சரிவில் தள்ளியது.
பின்னர், தண்டபாணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் ஜீவஜோதி. அப்போது தான் ஜீவஜோதியைக் கடத்த முற்பட்ட சம்பவம் நடந்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகாரானது. அந்த வழக்கில் ‘ஜீவஜோதி பிறழ் சாட்சிய மளித்ததால் "ராஜகோபால் உள்ளிட்ட ஆறு பேரையும் விடுவிக்கிறேன்'’என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சேது மாதவன். ஏன் பிறழ் சாட்சியானார் ஜீவஜோதி? ராஜ கோபால் தரப்பிடமிருந்து தண்டபாணி சில லட்சங்கள் பெற்றுக்கொண்டு சமரசம் ஆகிவிட்டார் எனத் தகவல் வெளியானது. அதனால் தான், கோர்ட்டில் ஜீவ ஜோதி சாட்சியமளித்த போது "நான் கடத்தப்பட வில்லை... புகாரும் அளிக்க வில்லை'’என்று பல்டியடித்தார் என்று விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஜீவஜோதி, "எல்லாம் என் தலைவிதி...' என்று மட்டுமே பத்திரிகை யாளர்களிடம் சொன்னார்.
"சட்டம் அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனை வழங்கினாலும், இந்த வயதில் சிறையில் அவர் ஒரு சிரமமும் படக்கூடாது என்று மரண தண்டனை வழங்கி விட்டான், அவர் கும்பிட்ட முருகன். கடைசி காலத்தில், அண்ணாச்சிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு ஒரு தண்டனையும் கிடைக்கவில்லையே? இதுவா நீதி?''’என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார், அண்ணாச்சி ராஜ கோபாலின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அந்த விசுவாசி.