கடுகு சிறுத்தது தான். ஆனால் அதன் காரம் உள் நாக்கையும் உரைக்க வைத்து விடும். அப்படிப்பட்ட கடுகையும் அதில் வரையப்பட்ட தலைவர்களின் ஓவியங்களையும் கண்டு… இது எப்படி சாத்தியமாகும், என்று ஓவியர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் தலைவர் முதல் உலகத் தலைவர்கள் வரை அதிர்ச்சியில் மிரண்டு போய்ப் பார்க்கிறார்கள். அந்தப் பெருமையை சாதனையாக்கியவர் ஒரு தமிழன் என்பது பெருமிதத்துடன் காலரைத் தூக்கிக் கொள்ள வேண்டிய விஷயம்.
கேரளாவில் கொல்லம் நகரில் நடக்கும் பொருட்காட்சி உலகப் பிரசித்தம். கடந்த வாரம் அது முடிவடையக் கூடிய கடைசி மூன்று நாட்களுக்கு முன்பாக, உணவுக்குப் பயன்படுத்தப்படுகிற கடுகு, ஒவ்வொன்றிலும், கலைஞர், கேரள முதல்வர் பினராய் விஜயன், திருவள்ளுவர், சபரிமலை ஐயப்பன், மகாத்மாகாந்தி ஆகியோர்களின் உருவங்களை வரைந்து காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பேசவும் வைத்திருக்கிறது.
கடுகில் ஓவியமாகத் தீட்டிய அருகில் நின்றிருந்த அந்த ஓவியரையும் பாராட்டத்தவறவில்லை பார்வையாளர்கள். மேலோட்டமாகப் பார்க்கையில் ஏதோ கடுகு வைக்கப்பட்டிருக்கிறது என்று கடந்து சென்றவர்களிடம் அதன் பக்கம் நின்று கொண்டிருந்தவர், கொடுத்த லென்சில் மூலமாகப் பார்வையாளர்கள் பார்த்த பிறகு தான் வரையப்பட்ட ஓவியம் அவர்களைப் பிரம்மிப்படைய வைத்திருக்கிறது.
தகவல் சேனல் நிருபர் ஒருவருக்குத் தெரியவர அவர் செய்தியாக வெளியிட்டது. கேரள முதல்வர் பினராய் விஜயன் வரை போயிருக்கிறது. தனது படைப்பின் பக்கம் நின்றிருந்த தமிழ்நாட்டின் சேலம் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற அந்த ஓவியரை, முதல்வரின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தனது மனைவி சக்திதேவி, மகள் ஹரிசித்தாவுடன் சென்ற ஓவியர் வெங்கடேஷை வரவேற்ற முதல்வர் பினராய் விஜயனிடம், கடுகில்தான் வரைந்திருந்த ஓவியங்களையும், அவரது உருவம் தீட்டப்பட்டதையும் கடுகுகளைக் கொடுத்திருக்கிறார்.
இந்த ஓவியத்தை சாதாரணமாகப் பார்க்க முடியாது என்பதால், அதனைப் பார்க்க உதவுகிற லென்சையும் கொடுத்திருக்கிறார் வெங்கடேஷ் அதன் மூலம் கடுகில் வரையப்பட்ட தனது உருவம், சபரிமலை ஐயப்பன் மகாத்மாகாந்தி உள்ளிட்டவர்களின் ஓவியங்களையும் பார்த்து வியந்திருக்கிறார் பினராய் விஜயன். ஆச்சர்யமான ஒன்று என பாராட்டிய பினராய், ஓவியர் வெங்கடேஷ், அவரது மனைவி குழந்தையையும் கௌரவித்திருக்கிறார். தமிழகம் திரும்பிய கடுகு ஓவியர் வெங்கடேஷைத் தொடர்பு கொண்டு பேசியதில்.
சேலம் பக்கமுள்ள, தம்மம்பட்டிக் கிராமத்தைச் சோந்தவர் வெங்கடேஷ். தந்தை காலமாகிவிட்ட நிலையில், தாய் மற்றும் உடன் பிறந்த சகோதரர் இருவர் செட்டிலாகி விட்டனர். ஓவியத்தில் ஆர்வமிருந்ததால் ஏழு வயதிலிருந்தே ஓவியம் வரையக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அப்போது முட்டை ஒடுகளில் திருவள்ளுவர் உள்ளிட்டவர்களின் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். பின்பு ஒரே போஸ்ட் கார்டில் 1330 திருக்குறள்களையும் எழுதி முடித்தேன். இது போன்று சின்னச் சின்னப் பொருட்களில் ஓவியம் வரைவதைத் தொடர்ந்து சீர்திருத்தினேன்
1992ன் போது, ஒரு போஸ்ட் கார்டில் ஹிஸ்டாரிக்கல் தலைவர்கள் பலரது உருவங்களையும் வரைந்து என்னை நானே விரிவாக்கிக் கொண்ட நான், 1997ல் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை அமரவைத்து கடுகில் அவரது உருவத்தை வரைந்தேன். லென்ஸ் மூலம் அதைப் பார்த்து வியந்த கலைஞரய்யா, நாட்டின் முதல்வரைக் கடுகாக்கிய சிறுவன், என்று அவர் என்னைப் பாராட்டியது, முதன் முதலாகக் எனக்குக் கிடைத்த மிகப் பெரியபேறு. மறக்க முடியாத அங்கீகாரம். இதுபோல கடுகில் வரையப்பட்ட ஓவியங்களை லென்ஸ் மற்றும் கைக் கடிகாரங்களைப் பழுது நீக்குபவர்கள் அதைக் கையாள்வதற்காக லென்சுடன் கூடிய குமிழ் ஒன்றைக் கண்ணில் வைத்துப் பார்க்கிற லென்ஸ் மூலம் தெளிவாகப் பார்க்கலாம்.
எனது இந்த கடுகு ஓவியங்களை மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், கனடா போன்ற நாட்டினரும் வாங்கிச் சென்றுள்ளனர். லண்டனின் உள்ள ஜேம்ஸ் கல்லூரியின் மியூசியத்திலும் எனது ஓவியம் காட்சிக்காகவும் வைக்கப்பட்டிருக்கிறது. 1999ன் போது, எனது இந்த ஓவியத்தைப் பார்த்துப் பாராட்டிய அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் கிளிண்டன் பாராட்டுப் பத்திரமும் அனுப்பியது எனக்குக் கிடைத்த உலக அங்கீகாரமாகவே நினைக்கிறேன். தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் பார்த்து விட்டு, இது எப்படி சாத்தியமாகும் என்று ஆச்சியப்பட்டார். என்கிற அடக்கமான குரலே வெளிப்படுகிறது வெங்கடேஷிடமிருந்து.
தற்போது, மாணவர்கள் பயனடைகிற வகையில் மரபு வழிக்கல்வி பயிற்சி, மற்றும், ஓவியப் பயிற்சிக்காகவும், ப்ரீலான்சர் விரிவரையாளராக ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சென்று வருகிறார் கடுகு ஓவிய மன்னன். ஜே.வெங்கடேஷ்
அற்புதச் சாதனைகள், எளிதில் வரக்கூடியவைகளல்ல. ஆசீர்வதிக்கப்பட்ட வரமின்றி அவைகள் சாத்தியமுமில்லை.