இது யாரு பார்த்த வேலை? என்று கேட்க முடியாது. ஏனென்றால், அந்த வேலையைப் பார்த்தவர்கள் ‘நாங்கதான்’ என்று தங்களின் முகத்தைக் காட்டியிருக்கின்றனர். வேற ஒண்ணுமில்லீங்க.. வழக்கம்போல போஸ்டர் பரபரப்புதான்..
நடிகர் விஜய் ‘வாத்தியார்’ அவதாரம் எடுத்திருப்பதை, நக்கீரன் இணையத்தில், கடந்த ஜூன் 22-ஆம் தேதியே, ‘வாத்தியார் ஆன விஜய்’ எனத் தலைப்பிட்டு. போஸ்டர் ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருந்தோம். அடுத்து, அதே மதுரையில், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், ‘நாங்கள் கண்ட புரட்சி தலைவரே – புரட்சி தலைவியே’ என எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா கெட்டப்பில் விஜய் – சங்கீதா படங்களை அச்சிட்டு போஸ்டர் ஒட்டினார்கள். அத்தோடு நிற்கவில்லை. ‘எம்.ஜி.ஆரின் மறு உருவமே! 2021-ல் தமிழகம் தலையேற்க வாங்க தலைவா!’ எனத் தேனி மாவட்ட இளைஞரணி சார்பில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
‘விஜய்யை விஜய்யாகவே காட்ட வேண்டியதுதானே? அதென்ன எம்.ஜி.ஆரை ‘டார்கெட்’ வைத்து போஸ்டர் ஒட்டுவது?’ என்று அ.தி.மு.க தரப்பு முணுமுணுக்க.. இந்த போஸ்டர்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் “மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது; செஞ்சிக்கோட்டை ஏறியவர்களெல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது.” என்றிருக்கிறார், சூடாக.
மதுரையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் தரப்பிலோ, தங்களின் அடையாளத்தை மறைத்து, “உண்மையைச் சொல்லட்டுமா?” என்று பக்காவாக அரசியல் பேசினார்கள். இப்பவரைக்கும், அரசியலுக்கு வர்ற சினிமாக்காரங்க எல்லாருக்குமே வாத்தியாரா இருக்கிறவர் எம்.ஜி.ஆர். பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து, 1977-ல் முதன்முதலில் தமிழகத்தின் முதலமைச்சரானார். தொடர்ந்து மூன்று தடவை, முதலமைச்சரா இருந்திருக்காரு. எம்.ஜி.ஆர். மாதிரியே, ஹாலிவுட் நடிகராக இருந்த ரொனால்டு ரீகன் 1981-ல் அமெரிக்க அதிபரானார். பிறகுதான், ஆந்திர மக்கள் தெய்வமாகவே வழிபட்ட நடிகர் என்.டி.ராமராவ் அரசியலுக்கு வந்து, 1982-ல் ஆந்திர முதல்வரானார். ஆக, சினிமாவில் நடித்து, மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டால், ஆட்சியிலும் அமரமுடியும் என்பதற்கு, உலகத்துக்கே ‘பிள்ளையார் சுழி’ போட்டவர் எம்.ஜி.ஆர். அப்புறம் என்னங்க? விஜய் நடிகர்தானே? அவரோட ரசிகர்களான நாங்க, எம்.ஜி.ஆர். ரூட்ல போறதுல என்ன தப்பு? 1969-ல் ஆரம்பிச்சதுங்க.
அப்பயிருந்தே சினிமா பாதிப்பு தமிழ்நாட்டுல இருந்துட்டுவருது. அறிஞர் அண்ணா யாரு? நாடகத்துல நடிச்சிருக்காரு. சினிமாவுக்கு கதை-வசனம் எழுதிருக்காரு. கலைஞரும் அண்ணா மாதிரியேதான். ரெண்டும் பண்ணிருக்காரு. அதற்கப்புறம் எம்.ஜி.ஆர்.. அடுத்து அவரோட மனைவி வி.என்.ஜானகியும் சினிமாவுல நடிச்சவங்கதான். ஜெயலலிதாவும் ஃபேமஸ் நடிகைதான். சினிமா சம்பந்தப்பட்ட இவங்கள எப்படி மக்கள் முதலமைச்சர் நாற்காலில உட்கார வச்சாங்களோ, அதேமாதிரிதான் விஜய்யையும் 2021-ல் உட்கார வைப்பாங்க. எங்க எதிர்பார்ப்பை விமர்சிக்கிற தகுதி இங்கே யாருக்கும் இல்ல.” என்று அனலடிக்க பேசினார்கள்.
விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் ‘சீரியஸ்’ ரகமென்றால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் காமெடியானவை.
‘வரம் தந்த கடவுளே! எங்கள் வசந்தத்தின் விடியலே! வணங்குகிறோம் தலைவா!’ என, அரியர் பாய்ஸ் மற்றும் அரியர்ஸை வீட்டில் மறைத்த மாணவர்களின் சார்பில், நாகப்பட்டினத்தில் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். ஒரே கேள்விதான்! அரியர்ஸை வீட்டில் மறைத்த மாணவர்கள் ஏன் தங்களின் போட்டோவை ஊரே பார்க்கும்படி போஸ்டரில் போட்டார்கள்?
தமிழகத்தில் ‘சகலமும்’ அரசியலாகவே இருக்கிறது!