Skip to main content

“செத்த பாம்பை விஜய் தொடவில்லை” - இ.பி.எஸை கடுமையாக விமர்சித்த புகழேந்தி 

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
 TVK Vijay | EPS | ADMK | N TV |

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டில் கொள்கைகள் மற்றும் கூட்டணி ஆட்சியைப் பற்றி பேசியிருப்பது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி நக்கீரன் நடத்திய நேர்காணலில் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.  

விஜய் மாநாட்டில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் அகியோரது கட் அவுட் இருந்தது. அதே போல் பேரறிஞர் அண்ணா, பேசியிருந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை குறிப்பிட்டதோடு பெரியாரை பின்பற்றும் விளக்கத்தையும் கொடுத்திருந்தார். விஜய்யின் இந்த அரசியல் பயணம் தொடர வேண்டும். விஜய் சொன்ன  பிளவுவாத அரசியலையும் ஊழலை ஒழிப்பதையும் பற்றி எல்லோரும் பேசியதுதான். திராவிட மாடல் ஆட்சி, குடும்ப அரசியல் என்று அவர் விமர்சித்தபோது நேரடியாக பெயரைச் சொல்லியிருக்கலாம். 

திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, ரகுபதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் பா.ஜ.க. மாநிலத் தலைவரை விமர்சிப்பதுபோல் விஜய்யையும் விமர்சித்திருக்கலாம். ஆனால் ஆளுங்கட்சியைப் பற்றி விஜய் பேசுவது சகஜம்தான் என்று நழுவிப் போகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் சரியான பதிலை விஜய்க்கு சொல்லவில்லை என்பது என்னுடைய கருத்து. மாநாட்டில் விஜய், எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றி பேசியிருந்தால் ஏளனமாக இருந்திருக்கும். செத்த பாம்பை அவர் தொடக்கூடாது என்பதற்காகத்தான் எடப்பாடியை பழனிச்சாமியைப் பற்றி விஜய் பேசாமல் இருந்திருக்கிறார். விஜய் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்ததை நான் பாராட்டுகிறேன்.  இ.பி.எஸை தாக்கி பேசியிருந்தால் அது இ.பி.எஸ்-க்கு சாதகமாக அமைந்திருக்கும். அதனால்தான் விஜய் தவிர்த்திருக்கிறார். 

நீண்ட நெடிய பயணத்தை விஜய் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எளிதில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று விஜய் நினைத்தால் அது தவறாக முடியும். ஏனென்றால் தி.மு.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 45 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் அ.தி.மு.க. 20 சதவிகிதம் தான் வாக்கு சதவிகிதத்தை வைத்துள்ளது மற்ற கட்சிகள் இவர்களைவிடக் குறைவுதான். இதில் விஜய் பெறப்போகும் வாக்குகள் அ.தி.மு.க.வைத் தான் பாதிக்கும். மாநாட்டில் விஜய் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்ததிற்கே எனக்கு தெரிந்த ஒரு அ.தி.மு.க.வைச் சேர்தவர் சந்தோஷப்பட்டார். இதுபோல மதில்மேல் பூனையாக இருக்கக் கூடிய வாக்குகள் விஜய் பக்கம் போய்விடும். இதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இப்படியே போனால் பழனிச்சாமி தெருவில்தான் நிற்பார். விஜய்யின் மாநாடு அவருக்கு எச்சரிக்கை மணி. தி.மு.க. வாக்குகள் பிரிய வாய்ப்பில்லை. ஆனால் தி.மு.கவினர் விஜய்க்கு பதிசொல்ல தயங்குவது ஏன் என்று புரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.