குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். படேல் சிலை திறக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். தேர்தலையொட்டி வாக்குகளை கவருவதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை பாஜக நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன்.
குஜராத்தில் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் படேல் வாக்குகளை குறிவைத்து இந்த சிலை நிறுவப்பட்டதாக கூறுகிறார்களே?
நம்முடைய தேசிய தலைவர்களை இன்று ஜாதித் தலைவர்களாக பார்க்கின்ற மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. படேல் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் நம்முடைய நாட்டிற்கு ஆற்றிய இந்த பணிக்காக நிச்சயம் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த பணியை மேற்கொண்டிருக்கும். நம்முடைய நாட்டினுடைய சுதந்திரத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக சீலர்களையெல்லாம் இன்று ஜாதி வழியாக பார்க்கின்ற வாக்கு வங்கி அரசியலாக இதனை பார்க்க வேண்டியதில்லை.
நர்மதை அணையால் பாதிக்கப்பட்ட 72 பழங்குடி கிராம மக்களுக்கு அறிவித்த திட்டங்களை கவனிக்காமல் இப்படி ஒரு சிலை தேவையா என்கிறார்களே?
அந்த திட்டங்கள் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பக்கமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய விஷயம். அந்த பழங்குடியின மக்களுக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை, குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனால் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவது தவறு. அது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்றம் கொடுத்த உத்தரவுகளெல்லாம் அங்கு அமல்படுத்தப்பட்டு அந்த மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சிலை திறப்பு அன்று அந்த மக்கள் உண்ணாவிரதம் அறிவித்தார்களே அதைக்கூட பாஜக அரசு கண்டுகொள்ளவில்லையா?
இந்த சிலையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். பட்டேல் சிலைக்காக விவசாயிகளிடம் இருந்து நாடு முழுக்க மண் மற்றும் இரும்பு சேமிப்பினுடைய தமிழ்நாட்டு பொறுப்பாளராக இருந்தேன். ஒரு மலைப்பாங்கான பிரதேசத்திற்குள் இருப்பதைப்போன்ற அந்த பகுதியில் பழங்குடியின மக்களுக்கு இந்த சிலை வாயிலாக, அவர்களுடைய முன்னேற்றத்திற்கான கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஒரு சில நபர்கள், அமைப்புகள் மோடி அரசுக்கு எதிராக அந்த மக்களை தூண்டிவிட்டார்கள். அவ்வளவுதான்.
எந்த விதத்திலேயும் அந்த மக்களுடைய இயற்கையான சூழல், இயற்கைக்கான பாதிப்பு வராமல் லட்சக்கணக்கானோரை திரட்டி இந்த நிகழ்வை கூட பிரம்மாண்டமாக செய்ய முடியும். இந்த துவக்க விழா இயற்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் வெறும் 5 ஆயிரத்திற்கு உட்பட்டோரை மட்டுமே வைத்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கான வாய்ப்புகள் இப்போது உள்ளது. வரக்கூடிய காலங்களில் இயற்கை சூழல் கெடாதவாறு சுற்றுலா மேம்பாடு வளரப்போகிறது. இயற்கை சூழலை பொறுத்தவரை மிக மிக எச்சரிக்கையாக இந்த அரசு கையாளுகிறது.
சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிலையை அருகில் இருந்து பார்க்க ரூபாய் 120ம், மேலே ஏறிப்பார்க்க ரூபாய் 350ம் கட்டணம் என்பது சரியா?
நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடம் என்பது முழுமையாக இலவசமாக இருக்க வேண்டியது இல்லை. பல்வேறு சுற்றுலா தலங்களில் வருகை தரக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் குறைந்த அளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அது பராமரிப்புக்காக செலவிடப்படுகிறது. இவ்வளவு உயரமாக இருக்கக்கூடிய அந்த சிலைக்கு லிப்ட் பொறுத்தப்பட்டிருக்கிறது. சுற்றி இருக்கக்கூடிய மலர் பாதைகள், தோட்டங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்க எந்த ஒரு சுற்றுலா தலமாக இருந்தாலும், வளர்ந்த நாடுகளிலும் கூட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆகையால் அர்ப்பணிப்பு என்பதால் அனைத்தும் இலவசம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.