இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் நதிநீர் பிரச்சனை கூட இங்கு தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவிரி நதிநீர் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. பல வருடங்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சனையில் இரு மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. எல்லாரும் இந்தியர்கள் தான் என்று வெளியில் நாம் சொல்லிக்கொள்கிறோம் ஆனால் எதார்த்தம் வேறாக இருக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழகத்தில் கர்நாடகாவினர் தாக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா.
தமிழகம், கர்நாடகா இடையே இருக்கும் காவிரி பிரச்சனையை பேசி தீர்க்க முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது, அதன்பிறகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. பல்வேறு விவாதங்களுக்கு பிறகு நடுவர் மன்றம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டும்; மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் வழங்கிய 192 டிஎம்சி தண்ணீர் அளவிலும் 14.75 டிஎம்சி யை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுப்படியோ, நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படியோ தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டதில்லை. இதற்காக பல போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள், அழுத்தங்கள் என என்ன நடந்தாலும் கர்நாடக அரசு மறுப்பு நிலையிலேயே உள்ளது.
6 வாரத்திற்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம், 2018 ஆம் அண்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை வரும்போது தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடுவதும், அவர்கள் நமக்கு குறிப்பிட்ட தண்ணீரை தர உத்தரவிடுவதும், அதனை கர்நாடகா மதிக்காமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இப்படியான சூழ்நிலையில்தான் கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டியும், செப்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தது. இருமாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என செப்டம்பர் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், பருவ மழை பொய்த்து போனதால் கர்நாடக மாநிலத்தில் வறட்சி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கரநாடக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்; தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த 23 ஆம் தேதியிலிருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது.
தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்ட 23 ஆம் தேதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் தற்போது திறக்கும் தண்ணீரே பற்றாக்குறை தான் என்று தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக திமுகவினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்படி இருக்கையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைமையிடம் பேசி கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட முயற்சி செய்யலாமே என்றும் சிலர் பேசுகின்றனர்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், கர்நாடகாவில் தண்ணீர் திறக்க கூடாது என்று உறுதியாக காங்கிரஸ், பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் பிரச்சனையில் அரசியலாளர்களுடன், கர்நாடகா சினிமா துறையும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் போக கூடாது என்று குரல் கொடுத்து வருகிறது. நேற்று கர்நாடக மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து திதி கொடுத்து போராட்டம் செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படி அவமதிக்கலாமா என்று சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். அதேசமயத்தில், திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி திதி கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.
காவிரி பிரச்சனையை வெறும் அரசியலில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தவில்லை; சினிமாவிலும் அதன் பிடி நீண்டிருக்கிறது. காவிரி பிரச்சனைக்கு எப்படி கர்நாடக திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்களோ, அதேபோல தமிழக திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவாக அரசியல் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகளுடன் தமிழ் திரைப்பிரலங்களின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டு அவர்கள் நடிக்கும் படங்களை திரையிடக் கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அரசியல் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, எந்த கர்நாடக திரை பிரபலங்களின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டு அவர்களின் படங்கள் திரையிடக் கூடாது என்று தமிழகத்தில் இதுவரை எந்த குரலும் எழவில்லை என்று சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
காவிரியில் தண்ணீரை திறந்தால் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என்றும், அதே சமயம் காவிரியில் தண்ணீர் வாங்கி தரவில்லை என்றால் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என தொடர்ந்து அரசியல் செய்யப்பட்டு வருகிறது.