ஜஃபேகாபி எனும் ட்ராஜன் வைரஸ்..!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வான்னாகிரை ரேன்சம்வேர் எனும் வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் பெரும்புள்ளிகளின் கணினிகளைத் தாக்கியது. இந்த வான்னாகிரை வைரஸ் அது தாக்கும் கணினிகளில் உள்ள தகவல்களை எல்லாம் என்கிரிப்ட் (பயன்படுத்த முடியாத நிலை) செய்து வைத்துவிடும். அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பாதிக்கப்பட்டவர் ஹேக்கர்களுக்கு பிட்காயின் முறைப்படி பணம் செலுத்தவேண்டி இருக்கும். பணம் செலுத்திய பின்னும் பலபேரின் ரகசிய தகவல்கள் திரும்பக்கிடைக்காமல் போன செய்திகளும் வந்தன. ஒருவழியாக வான்னாகிரை வைரஸின் தாக்கம் இப்போதுதான் குறைந்துள்ளது. அதற்குள், அம்சமாக வந்திறங்கியிருக்கிறது ஜஃபேகாபி வைரஸ்.

ஜஃபேகாபி என்றால்..
ஜஃபேகாபி எனப்படுவது ட்ராஜன் வகை வைரஸ். ட்ராஜன் என்றால் நமக்கு முற்றிலும் சம்மந்தமில்லாத ஒரு விஷயம் நம்மிடம் இருந்துகொண்டே நமக்கே வேட்டு வைக்கும் என அர்த்தப்படும். இந்த ஜஃபேகாபி வைரஸ் ஸ்மார்ட்போன்களைதான் பெரும்பாலும் தாக்கக்கூடியது. இதனை பிரபல ஆண்டிவைரஸ் நிறுவனமான கேஸ்பர்ஸ்கிதான் முதலில் கண்டுபிடித்தது. பொதுவாக ஜஃபேகாபி வைரஸ்கள் ஸ்மார்ட்போன்களின் வயர்லெஸ் அப்ளிகேஷன் ப்ரோட்டோகால் எனும் முறையைப் பயன்படுத்தி, ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் செல்போன் கணக்கில் இருந்து, அவர்களுக்கே தெரியாமல் பணத்தைத் திருடும்.
எப்படி செல்போனுக்குள் நுழையும்?
ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்கு தாங்கள் என்ன அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறோம் என்கிற குறைந்தபட்ச விழிப்புணர்வின்மை ஹேக்கர்களின் முதலான மூலதனமாகி விட்டது. ஆம், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் பல லட்சக்கணக்கான அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் உண்டு. ஷேர் இட் மாதிரியான அப்ளிகேஷன்களின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. இதுமாதிரியான ஆட்கள் தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைத்து பயன்படுத்தும் பேட்டரி மாஸ்டர் போன்ற அப்ளிகேஷன்களின் வழியாக இந்த வைரஸ்கள் ஸ்மார்ட்போன்களில் சுலபமாக நுழைந்துவிடுகின்றன.

கொள்ளையடிக்கும் முறை..
இந்த ஜஃபேகாபி வைரஸ் தாக்கப்பட்ட ஸ்மார்ட்போனில் செயல்பாட்டுக்கு வந்தபின், வயர்லெஸ் அப்ளிகேஷன் ப்ரோட்டோகால் எனும் முறையைப் பயன்படுத்தி இணையப் பக்கங்களுக்குள் நுழையும். பின்னர் மொபைல் பணபரிமாற்ற முறைப்படி சம்மந்தப்பட்டவரின் செல்போன் கணக்கில் இருந்து, பல மதிப்புக்கூட்டு சேவைகளை உபயோகத்திற்குக் கொண்டுவரும். இதன்மூலம், இணையப் பக்கங்களில் உள்ள பல விளம்பரங்களும் கிளிக் செய்யப்பட்டு, அதன்மூலமும் கணிசமான பணம் மொபைல் கட்டணமாக பெறப்படும். இதற்காக எந்தவிதமான வங்கிக்கணக்கும் தேவைப்படாத நிலையில், இப்படி ஒன்று தனது ஸ்மார்ட்போனில் நடந்துகொண்டிருப்பதை சம்பந்தப்பட்டவர் கொஞ்சமும் தெரிந்திருக்கமாட்டார். ‘கேப்சா’ எனப்படும் பயன்பாட்டாளர் மனிதன் தானா? என்ற முறையையும் ஜஃபேகாபி தனது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாக கடந்துவிடும். பொதுவாக மதிப்புக்கூட்டு சேவைகள் பயன்பாட்டுக்கு வந்தால் ஒரு குறுஞ்செய்தி சேவை தரப்பில் இருந்து அனுப்பப்படும். ஆனால், அதுமாதிரியான குறுஞ்செய்திகளைக் கூட இந்த ஜஃபேகாபி நாசுக்காக தூக்கிவிடும்.
எங்கெல்லாம் பாதிப்பு?
கடந்த ஒருமாதத்தில் ஜஃபேகாபி வைரஸால் உலகம் முழுவதும் உள்ள 47 நாடுகளைச் சேர்ந்த 4,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கிட்டத்தட்ட 37.5% தாக்குதல்களைக் கண்டுபிடித்து முற்றிலுமாக நீக்கியும்விட்டதாக கேஸ்பர்ஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஜஃபேகாபி வைரஸால் தாக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 40% இந்தியாவைச் சேர்ந்தவை என்றால் நம்பமுடிகிறதா? மேலும், இதன் தாக்கம் கூடிய விரைவில் அதிகமாக இருக்கும் சொல்லப்பட்டு வருகிறது. விரைவில் ஜஃபேகாபி தலைப்புச்செய்தியாகவும் மாறலாம். இந்தியா, ரஷ்யா, துருக்கி மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஸ்மார்ட்போன்களிலும், ஜஃபேகாபியின் தாக்குதல்கள் அதிகம் இருப்பதாக கேஸ்பர்ஸ்கி தெரிவித்துள்ளது.

என்ன செய்தால் தடுக்கலாம்?
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் குறித்த போதிய தெளிவுடன் இருக்கவேண்டும். பொதுவாக முறையான பரிசோதனைக்குட்படாத (Unknown Sources) அப்ளிகேஷன்களை பகிர்வதையும், அவற்றைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவேண்டும். நம்பத்தகுந்த ஆண்டி-வைரஸ் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். பெரும்பாலான மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனங்கள் வயர்லெஸ் அப்ளிகேஷன் ப்ரோட்டோகால் என்ற வசதியை செயலிழப்பு செய்யும் வசதியைத் தருகின்றன. இதுகுறித்து கூடுதல் தகவல்களைப் பெற்று ஜஃபேகாபிக்களிடம் இருந்து நிரந்தரமாக தப்பிக்கலாம்.
உலகின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதேவேளையில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் பலரும் முறையான விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லை. குறைந்தபட்ச பாதுகாப்புடன் செயல்பட்டால்கூட ஜஃபேகாபி போன்ற வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
- ச.ப.மதிவாணன்
தொடர்புடைய செய்திகள்: