சேலத்தில் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் சின்னத்திருப்பதி மூக்கனேரி அடிக்கரையைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் சதீஸ் (29). அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பிரசாந்த் (21). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வீராணம் அருகே, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர்.
ஆக. 15ம் தேதி, கன்னங்குறிச்சியில் ஒருவரை வழிமறித்து அவர் ஓட்டி வந்த 3 லட்சம் மதிப்புள்ள காரை கடத்திச்சென்றனர். இச்சம்பவம் நடந்த அடுத்த இரு நாள்களில், மேற்படி ரவுடிகள் இருவரும் மற்றொரு கூட்டாளியான ஜெயவேல் என்பவருடன் சேர்ந்து கொண்டு ஜட்ஜ் ரோடு பகுதியில் ஒருவரிடம் கத்தி முனையில் அரை பவுன் மோதிரம், 1400 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழிப்பறி செய்து கொண்டு தப்பி ஓடினர்.
இது தொடர்பான வழக்கில் சதீஸ், பிரசாந்த் ஆகிய இருவரையும் கன்னங்குறிச்சி காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கன்னங்குறிச்சி காவல்துறையினர், மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் ஆகியோர் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்படி, மேற்படி ரவுடிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணையர் உத்தரவிட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாந்த், சதீஸ் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் சார்வு செய்தனர்.