‘Thug life’ இந்த வார்த்தை இணையத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற பிரபலமான வார்த்தை . எதையுமே கண்டுக்காமல் அசால்ட்டா பதில் சொல்றவங்களுக்கு Thug life பயன்படுத்துறோம். இந்த Thug life எங்கிருந்து வந்தது? எப்படி உருவானது?
தக்கீஸ் என்கிற கொள்ளைக் கூட்டத்தில் தக் பெக்ராம் என்கிற கொடூரமான கொள்ளையன் இருந்தான். 1765 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் என்கிற கிராமத்தில் பிறந்தவன். சிறுவயது முதலே கூச்ச சுபாவமான இவன் யாருடனும் அதிகமாக பேசவோ பழகவோ விளையாடவோ மாட்டான். அப்படியிருந்தும் இவனுக்கு தக்கீஸ் கொள்ளைக் கூட்ட குழுவைச் சார்ந்த நண்பன் கிடைக்கிறான். அவன் மூலமாக அந்தக் குழுவில் இணைகிறான்.
ஆரம்பத்தில் கொள்ளைக் கூட்டத்தில் சிறிய உதவியாளனாக இருந்தவன், தன்னுடைய 25வது வயதில் தக்கீஸ் கொள்ளைக் கூட்டத்தின் முக்கிய புள்ளியாக உருவெடுக்கிறான். அதிகமாக கொள்ளை அடிக்க வேண்டும் என்ற வெறியும், கொள்ளையின் போது தடுப்பவர்களை இரக்கமற்று கொலை செய்வதிலும் ஒரு மிருகம் போல நடந்து கொள்வதால் கூட்டத்தில் பெரிய ஆளாகிறான். பெக்ராமின் வன்முறைத் தன்மையைப் பார்த்த தக்கீஸ் தலைவர்களே பயப்படுகிற அளவுக்கு வளர்ந்து கொண்டே போகிறவனுக்கு, நாம் தனியாக ஒரு கூட்டத்தினை உண்டாக்கினால் என்னவென்று யோசித்து தன்னை இந்த தக்கீஸ் கொள்ளைக் கூட்டத்தில் இணைத்த நண்பனை தளபதியாக வைத்து 200 பேர் கொண்ட புதிய கொள்ளைக் கூட்டத்தினை உருவாக்குகிறான்.
தக்கீஸ்கள் சிக்கல் நிறைந்த இடத்தில் பிரச்சனையானவர்களிடம் கொள்ளை அடிக்க மாட்டார்கள். ஏனென்றால் பிரச்சனை பெரிதானால் தங்களை அழித்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் பெக்ராம் சிக்கல் நிறைந்த இடங்களில் தான் கொள்ளை அடித்து வந்தான். குறிப்பாக இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ்காரர்களிடம் தக்கீஸ்கள் கொள்ளை அடிப்பதில்லை. ஆனால் பெக்ராம் அங்கும் கொள்ளை அடித்து வந்தான்.
பிரிட்டீஷ்கார ராணுவத்தில் இருக்கிற ஒரு சிப்பாயின் பெண்ணின் உதவியோடு அங்கு சென்று கொள்ளை அடித்துவிட்டுக் கொலையும் செய்து விடுகிறான். தொடர்ச்சியாக கொலை, கொள்ளை ஆவதால் நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் அரசு 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கி கிராமம் கிராமமாகச் சென்று விசாரிக்கிறார்கள்.
கொலை, கொள்ளையில் ஈடுபடுவது தக்கீஸ்கள் தான் என்பது எல்லோருக்கும் தெரிய வருகிறது. ஆனால் அதில் குறிப்பிட்ட அந்த குழுக்கள் யார்? அதில் தலைவன் யார் என்று தீவிரமாக விசாரிக்கிறது பிரிட்டிஷ் தேடுதல் குழு. தேடுதலின் முடிவில் அந்த கிராம மக்கள் கண்களில் பயத்தோடு இதையெல்லாம் செய்வது தக் பெக்ராம் தான் என்று சொல்லிவிடுகிறார்கள். இந்த தகவலையும் பிரிட்டிஷ் தலைமைக்கு 5 பேர் தேடுதல் குழு சொல்லி விடுகிறது. துரதிஷ்டவசமாக பெக்ரமிடன் சிக்கிக் கொள்கிற அந்த 5 பேரையுமே தக் பெக்ராம் கொடூரமாகக் கொன்று விடுகிறான்.
தக் பெக்ராமின் அட்டூழியத்தை அடக்க பிரிட்டிஷ் அரசு இங்கிலாந்திலிருந்து வில்லியம் ஹென்றி ஸ்லீவ்மென் என்ற அதிகாரியை இந்தியா வர வைக்கிறார்கள். அவர் ஜபல்பூர் கிராமத்தினைச் சுற்றி விசாரிக்கும் போது தக்கீஸ்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்கிறார். தக்கீஸ்கள் பழக்கவழக்கம், நம்பிக்கைகள், உணவு, கொள்ளை அடிக்கும் முறைகள் என அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்கிறார்.
தக் பெக்ராமைப் பற்றி விசாரிக்கிறார் என்பதைத் தெரிந்தே அவனது குழு பல முறை கொலை மிரட்டலும், கொலை முயற்சியையும் செய்து பார்க்கிறார்கள். ஆனால் எதற்குமே அசராத வில்லியம் ஹென்றி, தொடர்ச்சியாக தக் பெக்ராமை பிடிக்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். தக்கீஸ்களை அழிக்க பிரிட்டிஷ் அரசு உறுதிபூண்டதை அறிந்த தக்கீஸ்கள் பலர் சரண்டர் ஆகிறார்கள். அதில் ஒருவன், தக் பெக்ராமின் வலது கரமாக செயல்படுகிற சையத் அமீர் அலியைப் பிடித்தால் தக் பெக்ராமை பிடித்து விட முடியும் என்ற தகவலை சொல்கிறான்.
அமீர் அலியைத் தேடிப்போன போது அவன் தப்பிக்கவே அவனது குடும்பத்தை கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள். அதை அறிந்து அவனும் சரணடைகிறான். அவனின் மூலம் தக் பெக்ராமையும் பிடிக்கிறார்கள். ஒரு சில ஆண்டுகள் சிறையிலிருந்தவனை மீட்க அவனது எஞ்சிய ஆட்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இறுதியாக ஜபல்பூரின் நடுவில் உள்ள மரத்தில் தக் பெக்ராமும் அவனது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட்டார்கள்.
தக் பெக்ராமின் அட்டூழியத்தை அழித்த வில்லியம் ஹென்றி ஸ்லீவ்மென் நினைவாக மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஊருக்கு ’ஸ்லீமனாபாத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றும் அந்த ஊர் இருக்கிறது. தக் லைப் என்பது பெருமைமிக்க வார்த்தை இல்லை. அது ஒரு கொள்ளைக் கூட்டத்தினரைக் குறிக்கிற வார்த்தை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.