அமமுக தலைமை மீது கடும் விமர்சனம் செய்த தங்க தமிழ்செல்வன், தனக்கு ரெஸ்ட் தேவை, சில காலம் அமைதியாக இருக்கப்போகிறேன் என்று மீடியாக்களிடம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுக எம்எல்ஏ செம்மலை.
அமமுக தலைமையை பிடிக்காதவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நடக்கிறது. ஆனால் செந்தில் பாலாஜியை தொடர்ந்து தங்க தமிழ்செல்வன் போன்றோர் திமுகவில் இணைகிறார்களே?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுகவினுடைய மக்கள் செல்வாக்கு என்ன என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அமமுகவுக்கு டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள், தினகரன் கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பார். நாம்தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்போடு சென்றார்கள். கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பதாக சொல்லி நம்ப வைத்தார் தினகரன்.
இப்பொழுது 18 சட்டமன்ற உறுப்பினர்களை பலிகாடாவாக்கி, தான் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக்கொண்டு, அவரை நம்பி வந்தவர்களை ஏமாற்றிவிட்டார். அமமுகவை ஒரு அமைப்பாக நடத்திய அவர் தேர்தல் ஆணையத்தில் அதை பதிவு செய்ய இருக்கிறேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியபோதுதான் அவரை அவர் பின்னால் சென்றவர்கள் நம்பவில்லை.
டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள், அவர் மீது நம்பிக்கையை இழந்து இன்றைக்கு அதிமுகவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், அதிமுகவைவிட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வந்து இணைந்துகொள்ளலாம் என்று அறிக்கையும் விட்டுள்ளார்கள். அந்த அடிப்படையில்தான் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிமுகவில் மீண்டும் வந்து இணைந்து கொண்டுள்ளார்கள்.
தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்திருக்கிறார் என்றால், அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். எனவே அமமுகவினர் அதிமுகவில் இணைவதற்கு எந்த தடையும் இல்லை. இணைந்து எப்பொழுதும் கட்சி பணிகளை ஆற்றலாம்.
தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வளர்ச்சிக்கு தங்க தமிழ்செல்வன் தடையாக இருப்பார் என்பதால் அதிமுகவில் இணைய அவருக்கு தடை இருந்ததாக கூறுகிறார்களே?
தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவதற்கு எதிர்ப்பு இருந்தது என்பதெல்லாம் உண்மையல்ல. அவராக அவரது விருப்பப்படி திமுகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவுக்கு வருவதற்கு அவருக்கு யாரும் தடைவிதிக்கவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அவர் தாரளமாக வரலாம். அதை தலைமை முடிவு செய்யும் என்று சொல்லியிருந்தார். ஆனால் தங்க தமிழ்செல்வன் எங்களுடைய தலைமையை அணுகி கேட்டதாக தெரியவில்லை. அப்படியிருக்கும்போது அவர் அதிமுகவில் இணைய எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மையல்ல. இவ்வாறு கூறினார்.